'கெத்து' என்பது கன்னட வார்த்தை. நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

  • IndiaGlitz, [Tuesday,February 02 2016]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை அல்ல என்பதை காரணம் காட்டி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டதை அடுத்து உதயநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் 'கெத்து' என்பது தமிழ் வார்த்தை அல்ல என்றும், இது கன்னட வார்த்தை என்றும் 'கெத்து' என்ற சொல்லிற்கு கன்னடத்தில் 'மாறுபட்ட நிழல்படம், சமம்' என்று அர்த்தம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில், "கெத்து' என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்றும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவர்களும் 'கெத்து' என்பது தமிழ்ச் சொல் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காபி, மேஜை, டீ, நாஸ்தா, பந்தா, "கெட்டப்பு', கப்பு, அப்பீட்டு ஆகிய வார்த்தைகள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இவை தமிழ் சொற்கள் அல்ல என்றும் இதைப்போலத்தான் 'கெத்து' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் திரைத் துறையில் அனுபவம் பெற்ற 4 பேரும், 3 அதிகாரிகளும் படத்தை பார்த்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.