மீண்டும் தொடர்கிறது 'கெத்து' வரிவிலக்கு பிரச்சனை
- IndiaGlitz, [Thursday,March 03 2016]
உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் டைட்டில் தமிழில் இல்லை என்ற காரணத்தால் தமிழக அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பு தெரிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் 'கெத்து' தமிழ்ச்சொல்தான் என்றும் இதனால் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கலாம் என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்.
இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வணிகவரித்துறை சார்பில் 'கெத்து' வரிவிலக்கு வழக்கை மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜரானார்.
இதையடுத்து நீதிபதிகள், 'கெத்து' படத்துக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி துரைசாமி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.