Short video - போதைப்பொருளுக்குச் சமமா? எச்சரிக்கும் பல்கலைக்கழக ஆய்வு முடிவு

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

எம்.எஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ரீல்ஸ், கிளிப்பிங்ஸ் போன்ற குறுகிய விடியோக்களை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுசெய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோக்களைப் பார்ப்பதால் ஜென் இசட் எனப்படும் 8-23 வயதுடைய சிறுவர்களும் இளைஞர்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

8-23 வயதுடைய சிறுவர்களையும் இளைஞர்களையும் நாம் பொதுவாக ஜென் இசட் என்று பாகுபடுத்துகிறோம். இந்த வயதில் படிப்பு விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் சமீபகாலமாக ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில் இந்த வயதுடைய நபர்கள் செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

அதிலும் வேகமாக ஓடும் ரீல்ஸ்களை பார்ப்பதற்கு மாணவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 மணி நேரம் வரை செலவிடுவதாகவும் அதில் கிட்டத்தட்ட 360-480 ரீல்களைப் பார்ப்பதாகவும் எம்எஸ் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டு இருக்கிறது.

இதனால் 40-60% மாணவர்கள் தங்களுடைய செல்போன் பயன்பாட்டில் பெரும்பாலான நேரங்களை ரீல்ஸ் போன்ற குறுகிய நேர வீடியோக்களை பார்ப்பதற்கே ஒதுக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் 65% மாணவர்கள் நீண்டநேரம் வீடியோக்களை பார்த்த பிறகு தவிர்க்க முடியாத குற்ற உணர்ச்சிக்குள் தள்ளப்படுவதாகவும் மேலும் சோக மனநிலைக்கு ஆளாக்கப்படுவதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.

இப்படி நீண்ட நேரம் குறுகிய வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும்போது 40% பெண்களும் 60% ஆண்களும் இருப்பதாகவும் அவர்கள் கிட்டத்தட்ட 2-3 மணிநேரம் குறுகிய வீடியோக்களைப் பார்க்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ரீல்ஸ் போன்ற செல்போன் பயன்பாட்டால் 75% மாணவர்கள் தங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் குறைந்த நேரத்தை மட்டுமே செலவிடுகிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதில் 65% மாணவர்கள ரீல்ஸ் போன்ற வீடியோக்களைப் பார்த்துவிட்டு உடல் ஆரோக்கியத்தில் சரிவினை சந்திப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இப்படி ஒட்டுமொத்தமாக படிக்க வேண்டிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் செல்போனிற்குள் தலையை குவித்து வைத்திருப்பதால் அவர்களின் நினைவாற்றலும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் 12 வினாடியாக இருந்த கவன ஆற்றல் தற்போது 8 வினாடிகளாக குறைந்தள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரீல்ஸ் – போதைக்கு சமம்

ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோக்களைப் பார்ப்பதற்கு செல்போனில் ஸ்க்ரோல் மட்டும் ஆட்டோபிளே போன்ற அம்சங்கள் இருப்பதால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் சிரமே இல்லாமல் இந்த வீடியோக்களை மணிக்கணக்காகப் பார்க்கின்றனர்.

இப்படி பார்ப்பதால் அவர்களது மூளையில் டோபமன் உற்பத்தியாகி போதைப்பொருள் உட்கொண்டது போன்ற உணர்வுக்குத் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் ஒருகட்டத்தில் கவனச் சிதறலை இது ஏற்படுத்துகிறது. மேலும் நேர்மறை எண்ணங்களை மாற்றி இது இயலாமை போன்ற எதிர்மறை எண்ணங்களையும் வளர்த்து விடுகிறது.

குறுகிய வீடியோக்கள் உடனடி மனநிறைவை தருவதால் இளைஞர்கள் தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் தருணங்களில் எல்லாம் இந்த வீடியோக்களைப் பார்ப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். இதனால் நிஜ உலக பிரச்சனைகளில் இருந்து தப்பித்து ஒருவித மனநிறைவை பெற முடிகிறது.

மேலும் அதிகப்படியான குறுகிய வீடியோ நுகர்வு எதிர்மறையான உணர்ச்சிகளை ஏற்படுத்தி அரோக்கியத்தையும் தடுக்கிறது.

இத்தகைய வீடியோக்களை பார்க்கும்போது செல்போனில் இருந்து வெளிவரும் நீல ஒளி மாணவர்களின் தூக்கத்தைக் கெடுத்து அவர்களின் உடலில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியையே இது தடுக்கிறது.

இதனால் போதுமான தூக்கம் இல்லாமல் கல்வி போன்ற செயல் திறனில் சிக்கலை சந்திக்கின்றனர். கூடவே அறிவாற்றல் செயல்பாடும் குறைகிறது.

அதிலும் குறிப்பாக இந்த குறுகிய வீடியோக்கள் மாணவர்களின் வாசிப்புத் தன்மை மற்றும் செயல் திறனை குறைத்து விடுவதாக எம்.எஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வு சுட்டிக்காட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.