Gemini Ganeshanum Suruli Raajanum Review
இதுவரை பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்துள்ள இளம் நடிகர் அதர்வா . முதல்முறையாக ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என்ற ரொமாண்டிக் காமடி படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கியிருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் காண்போம்.
ஜெமினி கணேசன் (அதர்வா) தன் முன்னாள் காதலிகள் லாவண்யா (ரெஜினா கஸாண்ட்ரா) மற்றும் தேவி (ஆதிதி பொஹான்கர்) ஆகியோரை சந்தித்துத் தன் திருமணப் பத்திரிகையை தர மதுரைக்கு வருகிறான். மதுரையில் அவன் சந்திக்கும் சுருளிராஜன் (சூரி) அவனுக்கு லாவண்யாவையும் தேவியையும் தேட உதவுகிறான். அப்போது ப்ரியா (ப்ரணிதா சுபாஷ்) என்ற பெண்ணை சந்திக்கிறார்கள். அவளும் ஜெமினியின் முன்னாள் காதலிதான். ஜெமினி-ப்ரியாவுடன் கல்லூரியில் படித்த பூஜா (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்பவளும் ஜெமினியின் நல்ல மனதை (!) கண்டு அவனைத் திருமணம் செய்துகொள்ளக் காத்திருக்கிறாள்.
இந்த நால்வருடனான ஜெமினியின் காதலும், பிரிவும்தான் கதை. இவர்களில் அவன் யாரை திருமணம் செய்துகொள்கிறான் அது எப்படி நடக்கிறது என்பதை திரையில் பார்த்துத் தெரிந்துகொள்க.
தலைப்பிலேயே தெரிவதுபோல் இது பெண்களையும் காதலையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும் ஒரு ரோமியோவின் கதை. இதுபோன்ற ஒரு படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டுமா அதை மட்டும் எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு படம் ஓரளவு திருப்தி தரும். வண்ணமயமான காதல் காட்சிகள், நகைச்சுவை, அழகான நாயகிகளின் கவர்ச்சி, மற்றும் கொஞ்சம் செண்டிமெண்ட் என்று அனைத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். எனவே கலகலப்பாக பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு மட்டுமே இந்தப் படம்.
ஆனால் படத்தில் புதிதாகவோ சுவாரஸ்யமாகவோ எதுவும் இல்லை. அரதப் பழசான கதை என்றாலும் நாயகனின் காதல்களை, அவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பதை எல்லாம் வைத்து இன்னும் சுவாரஸ்யமாக காட்சிகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. நாயகனிடம் பெண்கள் மிக எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர். எனவே எந்தக் காதலுடனும் நம்மால் ஒன்ற முடியவில்லை. காதல் காட்சிகளிலும் வசனங்களிலும்கூட எந்தப் புதுமையும் இல்லை.
இருந்தாலும் அதர்வாவின் துள்ளலும் துடுக்குத்தனமும் மிக்க நடிப்பும் நாயகிகளின் அழகான தோற்றம் மற்றும் எக்ஸ்பிரஷன்களும் காதல் காட்சிகளை ஓரளவு ரசிக்க வைக்கின்றன.
காமெடியும் படத்தில் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. முதல் பாதியில் சூரியும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் பேசும் வசனங்கள் எதற்கும் சிரிப்பே வரவில்லை. கடைசி அரை மணிநேரத்தில் மட்டும் சிரிக்க வைத்துவிடுகிறார் சூரி. குறிப்பாக அவரது பாத்திரத்தை ஒற்றி நிகழும் ஒரு ட்விஸ்ட் கைதட்டி சிரிக்க வைக்கிறது.
இவையெல்லாவற்றையும் விட படத்தில் பெண்களும் காதலும் கையாளப்பட்ட விதம் பிரச்சனைக்குரியது. இன்றைய சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றிய புரிதல் அதிகரித்துள்ளது. அவை திரைப்படங்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் நாயகன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது. பெண்கள் எல்லாம் வழிந்துகொண்டே நாயகன் மீது விழுவது- இப்படி எல்லாம் காட்சிகள் அமைப்பது சரியல்ல. இதை உணர்ந்ததாலோ என்னவோ கடைசி அரை மணி நேரப் படத்தில் நாயகன் செய்தவை அனைத்தும் தவறு என்று சொல்லும் வசனங்களை வைத்துவிட்டார் இயக்குனர். நாயகனின் செய்கைகளை நியாயப்படுத்தாமல் இருந்ததும் எந்த இடத்திலும் பெண்களைத் திட்டாமல் இருந்ததும் பெரிய ஆறுதல்.
அதர்வா தன் அழகான நடிப்பால் சில சாதாரண காட்சிகளையும் ரசிக்கவைக்கிறார். நாயகிகள் யாருக்கும் நடிக்க வாய்ப்பில்லை. ரெஜினாவும் ப்ரணிதாவும் பாடல்களிலும் சில காட்சிகளிலும் கவர்ச்சி மழைபொழிகிறார்கள். ஆதிதி பொஹன்கர் பாத்திரத்துக்கு தேவையானதை சரியாகத் தருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரளவு அழுத்தமான வேடம்.
சூரி கடைசி அரை மணிநேரங்களில் காமெடி விருந்து படைக்கிறார். சில எமோஷனல் வசனங்களையும் நன்கு பேசி கைதட்டல் வாங்குகிறார். நாயகனின் அப்பாவாக வரும் தயாரிப்பாளர் சிவா தன் பங்கை சரியாகச் செய்கிறார், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் மயில்சாமி தன் நகைச்சுவை நடிப்பால் ரசிக்கவைக்கிறார். குறிப்பாக அந்த ‘சசிகுமார்-சமுத்திரகனி’ வசனத்துக்கு தியேட்டரே சிரிக்கிறது.
டி.இமானின் பாடல்களை கேட்டு ரசிக்க முடியவில்லை ஆனால் கண்ணுக்கு குளிர்ச்சியான விதத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. பாடல்களில் கோட்டைவிட்டதை பின்னணி இசையில் ஓரளவு ஈடுகட்டியிருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்ப வண்ணமயமாக உள்ளது.
மொத்தத்தில் ’ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஒரு டைம்பாஸ் எண்டர்டெய்னர். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் சென்றால் கொஞ்சம் கலகலப்பாக பொழுதைப் போக்கிவிட்டு வரலாம்.
- Read in English