நடிகையர் திலகம் படத்திற்கு ஜெமினி கணேசன் மகள் எதிர்ப்பு

  • IndiaGlitz, [Friday,May 18 2018]

சமீபத்தில் வெளியான கீர்த்திசுரேஷின் 'நடிகையர் திலகம்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் இந்த படத்தை பெருமையாக பேசியதோடு, சாவித்திரியாக வாழ்ந்து காட்டிய கீர்த்திசுரேஷையும் பாராட்டினர்.

இந்த நிலையில் ஜெமினிகணேசனின் முதல் மனைவி மகளும் டாக்டருமான கமலா செல்வராஜ் இந்த படத்தில் தன்னுடைய தந்தை ஜெமினி கணேசனை தவறாக சித்தரித்துள்ளதாகவும் அவரை மட்டம் தட்டியுள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டாக்டர் கமலா செல்வராஜ் இந்த படம் குறித்து கூறுகையில், 'ஜெமினிகணேசன், சாவித்திரி வாழ்க்கை எல்லாரும் அறிந்த ஒன்று. இந்த படம் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. சாவித்திரியை சேர்ந்தவர்களை மட்டுமே கலந்தாலோசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். ஜெமினிகணேசன் குடும்பத்தினர்களாகிய எங்களை யாரும் கலந்தாலோசிக்கவில்லை. இதனால் இந்த படம் ஒரு பக்கத்தின் நியாயத்தை மட்டுமே குறிப்பிடுகின்றது.

குறிப்பாக சாவித்திரியை ஜெமினிகணேசன் விரட்டி விரட்டி காதலித்தார் என்பதும், சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை ஜெமினிதான் கற்று கொடுத்தார் என்பதிலும் உண்மையில்லை. அப்படி பார்த்தால் எங்கள் அம்மாவும் குடிகாரியாக ஆகவில்லையே, எங்களையும் தாறுமாறாக வளர்த்திருக்கலாமே. எனவே இந்த காட்சிகள் உண்மையில்லை

உண்மையில் அப்பா, தான் இரண்டு திருமணங்கள் செய்ததை மறைக்கவில்லை, அதுமட்டுமின்றி, சாவித்திரியின் மகன் மற்றும் மகள் இருவரையும் நன்கு படிக்க வைத்ததும், எங்கள் தந்தை ஜெமினிதான். எனவே ஜெமினி கணேசனின் புகழை கெடுக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்ததிலிருந்து மிகவும் வேதனைப்படுகிறேன்' என்று டாக்டர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.