குடிபோதையில் கார் ஓட்டினேனா? பத்திரிகையாளர்களை விளாசும் காயத்ரி ரகுராம்

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் அபராதம் கட்டியதாக முன்னணி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ள காயத்ரிரகுராம், 'தான் படப்பிடிப்பு முடிந்து திரும்பி வந்தபோது வழக்கமான பரிசோதனைக்கு மட்டுமே உட்பட்டதாகவும், இந்த செய்தியை பரப்பிய நிருபர் ஒருவர்தான் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கியதாகவும், கூறியுள்ளார்.

மேலும் அந்த நிருபர் தனக்கு தோன்றியது அனைத்தையும் கற்பனையாக எழுதியுள்ளதாகவும், ஓட்டுனர் உரிமை என்னுடைய வண்டியில் இல்லாததால் அந்த ஆவணங்களை சரி பார்க்க போக்குவரத்து போலீஸ்காரர் தன்னுடன் வந்ததாகவும், அவர்களுக்கும் எனக்கும் எந்தவித சண்டையும் இல்லை என்றும், அவர்களின் பணியை தான் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இனிமேலாவது தேவையில்லாத கதைகளை செய்தியாக்குவதை நிறுத்தி கொள்ளவும் என்று பத்திரிகையாளர்களை அவர் விளாசியுள்ளார்.