ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் நடிகையின் ஆவேச டுவீட்

சமீபத்தில் ஜோதிகா ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டபோது ’கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறார்கள். கோயில்களை பராமரிக்கிறீர்கள். அதேபோல் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் காசு கொடுங்கள். மருத்துவமனைகளும் பள்ளிகளும் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு நிதி உதவி செய்வோம் என்று கூறியிருந்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சை திரித்து ஒரு சில நெட்டிசன்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஜோதிகா ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசியதாக கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் விளக்கமளித்து, ஜோதிகா எந்த மதத்திற்கும் எதிராகப் பேசவில்லை என்றும் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அதிக நிதி கொடுத்து பராமரியுங்கள் என்றுதான் கூறியதாகவும் விளக்கமளித்தனர்.

இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது சமூகத்தில் ஜோதிகா தன்னுடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நடிகர்களுக்கு கோயில் கட்டும் கும்பலுக்கு அவ்வளவு தான் அறிவு என்றும், நடிகர்களுக்காக கோயில்களை கட்டியவர்கள் எப்பவுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் ஏனெனில் அவர்களின் மூளை அவ்வளவுதான் என்றும் கூறினார். மேலும் திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர் என்றும், ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துபவர்கள் வெட்கக்கேடானவர்கள் என்றும், நடிகை ஜோதிகா தனது பேச்சுக்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்..

மேலும் ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை என்றும், அவர் பேசும்போது சர்ச், மசூதியையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும், திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும் பிற மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் காயத்ரி ரகுராமின் இந்த டுவீட்டுக்கு கண்டனங்களும் ஒருசில ஆதரவு கமெண்ட்டுக்களும் பதிவாகி வருகிறது.