பிரதமர் மீது கல்லெறிந்தால் இதுதான் நடக்கும்: ஜோதிமணி எம்பிக்கு நடிகை எச்சரிக்கை

நேற்று தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தின் போது கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். நடந்து சென்று கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரதமர் மோடி மீது கல்லெடுத்து எறிவார்கள் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பேசிய பாஜக பிரமுகர் கரு.நாகராஜன், ஜோதிமணியை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஜோதிமணி பேசியதும், அதற்கு பதிலடி கொடுத்து கரு.நாகராஜன் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கரு.நாகராஜனுக்கு திமுக தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’பிரதமர் மீது ஜோதிமணி கற்களை வீசி எறிய முயற்சி செய்தால் அவரை காக்க என்னைப்போல பலர் இருக்கிறார்கள். ஜோதிமணி பிரதமர் மீது கற்களை எறிந்தால், அதில் முதல் கல்லை நான்தான் பெற்றுக் கொள்வேன் என்றும் ஜோதிமணி அவர்களே நீங்கள் விதைத்த விதையை நீங்களே தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஏழை மக்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் ஜோதிமணி பேசியதாகவும் பிரதமராக இருக்க கூடிய மோடி உங்களுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் அவர் எங்களுடைய பிரதமர் அதை நீங்கள் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த தொலைக்காட்சி விவாதத்தில் ஜோதிமணி அவமதிக்கப்பட்டதை அறிந்து தான் வருந்துவதாகவும் உங்களை விமர்சனம் செய்ய இவ்வளவு தூரம் அவர் சென்று இருக்க தேவையில்லை என்றும் கூறிவிட்டு, இருப்பினும் நீங்கள் பிரதமர் மீது எல்லை மீறி பேசிவிட்டீர்கள் என்பதையும் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என்றும் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.