சுற்றுச்சசூழல் பாதுகாப்பு… சைக்கிளில் அலுவலகம் வந்த பெண் கலெக்டர்!
- IndiaGlitz, [Thursday,December 23 2021]
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவரும் காயத்ரி கிருஷ்ணன் தனது வீட்டிலிருந்து மிதிவண்டியை மிதித்தவாறே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் வாரத்திற்கு ஒருமுறை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று திடீரென தனது சைக்கிளை மிதித்தவாறு ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். மேலும் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இதேபோன்று பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் எரிபொருள் இல்லாத வாகனம் மற்றும் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக அரியலூர் பெண் கலெக்டர் ரமன சரஸ்வதி தனது வீட்டிலிருந்து நடந்தே அலுவலகம் வந்திருந்தார். மேலும் வாரத்திற்கு ஒருமுறை இதைப் பழக்கப்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். மேலும் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தனது உதவியாளர்களுடன் மிதிவண்டியில் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதேபோல மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா தனது வீட்டிலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்து அலுவலகம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.