சீன அதிபருக்கும் கடிதம் எழுதலாமே: கமல்ஹாசனை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. எந்தவித முன்னறிவிப்பு இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கமலஹாசனின் இந்த கடிதத்தை கிண்டலடித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’நீங்கள் ஏன் சீனா அதிபருக்கும் தப்லீக் ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டாமல் உள்ளீர்கள்? என்றும் அரசின் உத்தரவுகளை மதிக்க தவறிய குடிமக்களுக்கும் கடிதம் எழுதுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தோல்வி அடைந்துவிட்டார் என்று சொல்லும் நீங்கள், முதலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் மாநில அரசிடம் முறையிடுங்கள் என்றும், பிரதமருக்கு கடிதம் எழுதுவது எல்லாம் இப்போது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள், காவல்துறையினர்கள் தங்கள் பணியில் தோல்வி அடைந்தார்களா? தமிழகத்தில் யார் சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருக்கின்றார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? எந்தவித ஆதாரமும் இல்லாமல் கடிதம் மூலம் குற்றச்சாட்ட கூடாது’ என்றும் காயத்ரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விளக்கேற்றி காட்டினார்கள் என்றும், நீங்கள் அதில் பங்கேற்கவில்லை என்பது எனக்கு உங்களுக்கு வேதனையாக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி காயத்ரி ரகுராம், மத்திய மாநில அரசுகளின் கடும் உழைப்பை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்’ என்றும் தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.