ஜெயலலிதா மறைவு குறித்து பிரதமர் மோடிக்கு கவுதமி எழுதிய துணிச்சலான கடிதம்

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகை கவுதமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து துணிச்சலான கேள்விகளுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மக்களின் தலைவர் ஒருவர் கடந்த 73 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய சிகிச்சை நிலவரம் உள்பட எந்த தகவல்களுமே வெளிவரவில்லை என்றும் அவரது தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் அவர் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே முக்கிய தலைவராக இருந்த ஜெயலலிதாவின் மருத்துவ சோதனைகள், சிகிச்சைகள், மருத்துவ அறிக்கைகள், திடீர் மரணம் ஆகிய அனைத்துமே மர்மமாகவே உள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எந்த தலைவரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஏன் இந்த தனிமைப்படுத்துதல்? முதல்வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் யார்? ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது? தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நபர் யார்? இவை அனைத்துமே ஒவ்வொரு தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. இந்த கேள்விகளை தமிழக மக்களின் ஒருவராக நான் கேட்கிறேன்.

சட்டப்படி பொதுமக்களால் தேர்ந்தெடுக்க ஒருவருடைய சிகிச்சை உள்பட மற்ற தகவலை அறிய ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு என்ற விதத்தில் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளேன். என்னைப்போல் பலர் இந்த கேள்விகளை எழுப்பி வந்தபோதிலும் இதுவரை யாரிடம் இருந்தும் எவ்வித பதிலும் வரவில்லை. பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகள் என்ன ஆவது?

நீங்கள் பலமுறை பல தைரியமான முடிவுகளை எடுத்து ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இடம் பெற்றுள்ளீர்கள். அதுபோலவே என் மனதில் தோன்றியுள்ள சந்தேகங்கள், பயங்கள் மற்றும் விடைதெரியாத கேள்விகளுக்கு உங்கள் மூலம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

இவ்வாறு நடிகை கவுதமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.