உப்பு, சர்க்கரையை ரேசன் கடையில் விற்க வேண்டாம்: பிரபல நடிகை கோரிக்கை
- IndiaGlitz, [Thursday,September 27 2018]
ஏழை எளிய மக்கள் அரிசி, சர்க்கரை ஆகியவற்றை ரேசன் கடையில் இருந்தே வாங்கி வரும் நிலையில் ரேசன் கடையில் வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்றும் நடிகை கவுதமி கூறியுள்ளார்.
விருதுநகரில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கவுதமி, 'நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பாக வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல என்றும் கூறினார். வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது என்றும் இதனை தவிர்ப்பதால் புற்று நோய் வருவதில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை செய்து கொண்டால் குணமாக்க முடியும் என்பதற்கு தானே சாட்சி என்றும் அவர் கூறினார். வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் இவற்றை ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி, கடல் உப்பு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும் என்றும் நடிகை கவுதமி கோரிக்கை விடுத்துள்ளார்.