சக்திக்கு மீறி தடைகளை தாண்டி வருகிறோம்: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்து கெளதம் மேனன்..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும் பல தடைகளை ’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்காக அனைத்தையும் செய்து வருகிறோம் என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’துருவ நட்சத்திரம் ’திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணத்தினால் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கௌதமேனன் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ’ஒரு பார்வை, நிறைய கனவு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பேனா பேப்பரில் உருவான ’துருவ நட்சத்திரம்’ இன்று திரைப்படமாக உருவெடுத்துள்ளது. எங்களுக்கு எதிராக அனைத்தும் இருந்தாலும் கூட எங்கள் ஆர்வம் அர்ப்பணிப்பு தான் இந்த படத்தை விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உதவப் போகிறது என்று நம்புகிறோம்.

நவம்பர் 24ஆம் தேதி இந்த படத்தை திரையிட முடியாத சூழல் ஏற்பட்டபோது நாங்கள் மலையை கூட நகர்த்த முயற்சித்தோம். அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாகாமல் போனது எங்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை என்று நாங்கள் பொய் சொல்ல விரும்பவில்லை. இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் நாங்கள் படத்தை இன்னும் கைவிடவில்லை என்பதை உறுதி செய்யவே.

எங்கள் சக்திக்கு உட்பட்டும். மீறியும் பல தடைகளை தாண்டி இந்த படத்தை திரைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் தான் எங்களுக்கு சியர்ஸ் லீடர்ஸ். உங்களிடம் இருந்து கிடைக்கும் அளவில்லாத அன்பு ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்து வருகிறது. எங்கள் இதயங்கள் தற்போது நிறைந்துள்ளன.

எங்கள் வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்கிறேன். ரிலீஸ் பணிகள் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் வேளையில் எங்கள் படைப்பை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரைவில் வர இருக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். ஜாஸ் மற்றும் பேஸ்மென்ட் டீமின் திரைப்படம் உங்கள் முன் வைக்க நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த அறிக்கையில் அவர் ரிலீஸ் செய்து குறித்த தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.