வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு முழுநீள காமெடி படம்: கெளதம் மேனன் திட்டம்

வடிவேலு நடிப்பில் ஒரு முழுநீள காமெடி படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால திட்டம் என கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் உருவாகிவரும்’ வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், விக்ரம் நடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ வருண் நடித்துள்ள ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக வடிவேலுவை வைத்து ஒரு முழுநீள காமெடி படம் இயக்க வேண்டும் என்ற திட்டம் தன்னிடம் உள்ளதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்ததும் வடிவேலுவை தொடர்பு கொள்ள இருப்பதாகவும் கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் இதுவரை முழுக்க முழுநீள ரொமான்ஸ் படம், முழுநீள ஆக்ஷன் படம், முழு நீள த்ரில் படங்களை பார்த்துள்ளோம். முதல்முறையாக அவரிடமிருந்து ஒரு முழுநீள காமெடி படம் உருவானால் அது எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.