'நரகாசுரன்' படத்தில் இருந்து விலக தயார்! கவுதம் மேனனின் அதிரடி அறிக்கை
- IndiaGlitz, [Thursday,March 29 2018]
கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்', செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தாமதத்திற்கு இயக்குனர் கவுதம் மேனனே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் தனது தரப்பிலான நீண்ட விளக்கத்தை தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் கார்த்திக் நரேனின் 'நரகாசுரன் படம் குறித்த டுவீட் என்னை அதிருப்தி அடைய செய்தது. இதுகுறித்து எனக்கு மீடியாக்களிடம்
வந்ததால் நான் அப்செட் ஆகிவிட்டேன். அதனால் தான் பதில் டுவீட் ஒன்றை பதிவு செய்தேன். இருப்பினும் நான் அவ்வாறு செய்திருந்திருக்கக் கூடாது. எனது செயலுக்காக நான் கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
கார்த்திக் நரேனின் நரகாசூரன் திரைக்கதை விஷயத்தில் நான் தலையிட்டதே கிடையாது. அதுமட்டுமின்றி அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு நான் முதலீட்டாளர்களிடம் கூறினேன். அவருக்கு முழு சுதந்திரம் அளித்தேன். அவர் கேட்ட நடிகர்களை அதிகம் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தோம். இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடைய உழைப்புதான். ,
பின்னணி இசையை கார்த்திக் மேசிடோனியாவில் உருவாக்கினார். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக நிறைய செலவு செய்துள்ளோம். துருவ நட்சத்திரம் போன்ற பெரிய படத்திற்கு நிதியை திருப்பிவிடும் அளவுக்கு இந்த படத்தின் பிசினஸ் பெரியது அல்ல. நரகாசூரன் லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.
நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சியுடன் வெளியேற தயார். அப்படி வெளியேறிவிட்டால் அந்த படம் என் பொறுப்பு அல்ல. மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் கார்த்திக்கிற்கு கோபம் வந்துள்ளது என நினைக்கின்றேன்
செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நான் தயாரிப்பாளரும் இல்லை பங்குதாரரும் இல்லை. போஸ்டர்களில் என் பெயர் இருக்க வேண்டும் என்று மதன் விரும்பியதால் சம்மதித்தேன். மற்றபடி அந்த படத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. செல்வராகவனை நான் மிகவும் மதிக்கிறேன். இந்த படமும் விரைவில் ரிலீஸாகும்.
மற்ற படங்களின் பிரச்சனைகளுடன் ஒப்படும்போது நரகாசூரன் படப்பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை. ஒரு டீம் சரியானபடி வேலை பார்த்தால் அதை கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் திட்டம் எங்களிடம் உள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகும்