நோ பாலில் விக்கெட் எடுத்து கொண்டாடுபவர்: அப்ரிடிக்கு காம்பீர் பதிலடி
- IndiaGlitz, [Wednesday,April 04 2018]
காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் பதிவு செய்த அஃபரிடிக்கு இந்திய அணி வீரர் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீரில் நடைபெற்று வரும் ஒருசில விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் அஃப்ரிடி தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் ''இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வருத்தமளிக்கும் வகையிலும், அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுய உறுதி மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகளைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது’’ என்று கூறியிருந்தார். அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவுதம் காம்பீர் தனது டுவிட்டரில் கூறியதாவது: ''நமது காஷ்மீர் தொடர்பாக ஷாகித் அஃப்ரிடி பேசியுள்ளது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கருத்துக் கூற என்ன இருக்கிறது?. அவர் ஐக்கிய நாடுகள் சபை (UN) குறித்து பேசுகிறார். அவரது அகராதியில் யு.என். என்பதற்கு அண்டர் நைண்டீன் (19 வயதிற்குட்பட்ட) என்பதே பொருள். ஊடகங்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. அஃப்ரிடி நோ பாலில் விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடுகிறார்’ என்று கூறியிருந்தார். காம்பீரின் டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது