ஒரே நாளில் அம்பானி, அதானிக்கும் கீழே சரிந்த ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க்… நடந்தது என்ன?
- IndiaGlitz, [Saturday,February 05 2022]
உலகளவில் டிஜிட்டல் சேவையில் முன்னணியில் இருந்துவரும் ஃபேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதோடு மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்துமதிப்பு இந்தியாவின் அதானி, அம்பானிக்கும் குறைவாக சரிவைச் சந்தித்துள்ளன.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களாக இருந்துவரும் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 11,12 ஆவது இடத்தைப் பிடித்திருந்தனர். ஆனால் நேற்று மெட்டா நிறுவனத்தின் பங்குகளில் 26% சரிவு ஏற்பட்டதால் 23,000 கோடி டாலர் அளவிற்கு அதன் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மெட்டா நிறுவனத்தில் 12% பங்குகளை வைத்திருக்கும் மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்து தற்போது 85 பில்லியன் டாலராக குறைந்திருகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் டேட்டா சம்பந்தமான பாதுகாப்பு வழிமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 1,000 கோடி இழப்பீடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. இதைத்தவிர ஃபேஸ்புக் மென்பொருளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 192 கோடியில் இருந்து 192.9 கோடியாக இந்த வாரம் குறைந்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் மென்பொருளில் விளம்பரம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு செலவுத்தொகை குறைக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் தற்போது ஃபேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26% குறைந்து 23,000 கோடி டாலர் இழப்பீட்டை சந்தித்து இருக்கிறது. இதனால் ஜுக்கர் பெர்க்கின் சொத்துமதிப்பு 85 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதையடுத்து அதானி, அம்பானிக்கும் கீழே சரிந்து ஜுக்கர் பெர்க் உலகப் பணக்காரர்களின் வரிசையில் 12ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்த வரிசையில் கௌதம் அதானி 90 பில்லியன் டாலருடன் 10 ஆவது இடத்தையும் 89 பில்லியன் டாலருடன் அம்பானி 11ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.