கங்கை அமரனுக்கு கேரள அரசின் மிகப்பெரிய விருது.
- IndiaGlitz, [Tuesday,January 10 2017]
கேரள தேவசம் போர்டு மற்றும் கேரள சுற்றுலாத்துறை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மத ஒற்றுமை மற்றும் தேச ஒற்றுமைக்காக பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் இந்த விருதை ஏற்கனவே பிரபல பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோர் பெற்றுள்ள நிலையில் தற்போது கங்கை அமரன் இந்த விருதினை பெறவுள்ளார்.
இந்த விருது தனக்கு கிடைத்தது குறித்து கங்கை அமரன் கூறியதாவது: கேரள அரசு ஹரிவராசனம் விருதை எனக்கு அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகின் மிகச்சிறந்த பாடகர்களான ஜேசுதாஸ், எஸ்பிபி ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக எனக்கு இந்த கெளரவம் கிடைத்டுள்ளது. என்னை கெளரவித்த கேரள அரசுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
கங்கை அமரன் அவர்களின் மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட்பிரபுவும் கேரள அரசுக்கு தனது நன்றியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்