தியாகராஜ கீர்த்தனைகளுக்கு ராயல்டி கொடுத்தீர்களா? இசைஞானிக்கு கங்கை அமரன் கேள்வி
- IndiaGlitz, [Monday,March 20 2017]
இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பொதுமேடையில் பாடக்கூடாது என்றும் தவறினால் காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன், இளையராஜாவுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
'இளையராஜாவின் இசை மழையைப் போன்றது. அதனை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். தனது இசைக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது முறையல்ல' என்று கூறியுள்ளார்.
மேலும் ராயல்டி கொடுத்துவிட்டுதான் பாடல்களைக் கேட்க வேண்டும் என மக்களுக்கு இளையராஜா கட்டுப்பாடு விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள கங்கை அமரன், பாடல்களை மக்கள் முணுமுணுக்கவும் ராயல்டி கேட்பீர்களா? என்றும், தியாகராஜ கீர்த்தனைகளை பாட நீங்கள் ராயல்டி கொடுத்தீர்களா? என்றும் இளையராஜாவுக்கு கங்கை அமரன் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். கங்கை அமரன் பாடகர் எஸ்பி, பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.