கொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது!!! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!
- IndiaGlitz, [Friday,April 03 2020]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் கங்கை நதியில் கழிவுகள் கொட்டப்படும் அளவு முற்றிலும் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கங்கை நதி ஆரோக்கியமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கங்கையைச் சுத்தப்படுத்துவதற்காக மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இந்தத் திட்டத்திற்காகப் பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்ற வந்தது. கங்கை என்பது புனிதத் தலமாக இருப்பதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த நதிக்கரையை சார்ந்தே பல தொழில் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. இதனால் மாசின் அளவும் கட்டுக்கு அடங்காமல் சென்றுவிட்ட நிலையில் மத்திய அரசு தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது.
20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றங்களை காணமுடியவில்லை. ஆனால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஊரடங்கினால் கங்கை நதியில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் CPCB கணக்கெடுப்பின் படி பல இடங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு நீர் உகந்ததாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 இடங்கள் சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 27 இடங்களில் உள்ள தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றதாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 27 இடங்களிலும் வளமான மீன் ஆதாரங்களாக இருப்பதற்கு ஏற்றது எனவும் தெரிய வந்துள்ளது.
கொரோனாவால் கங்கை ஆரோக்கியம் பெற்றிருக்கிறது. இவ்வளவு காலமும் மனிதர்களின் கட்டுப்பாடில்லாத செயலினால் பாதிக்கப்பட்டு வந்த கங்கை தன்னை சிறிது காலம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறது எனப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.