உலகம் முழுவதும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்!!! எப்போது நடைபெறும்??? விரிவான தொகுப்பு...
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சாத்தயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில முக்கிய விளையாட்டு போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டிருக்கின்றன. சில போட்டிகள் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தகைய முக்கிய விளையாட்டு மற்றும் நிகழ்வுகள் பற்றிய விரிவான தொகுப்பு.
ஒலிம்பிக் போட்டிகள்- இதில் ஜப்பானில் நடக்கவிருந்த 2020 ஒலிம்பிக் போட்டியும் ஒன்று. ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபேவும் ஒலிம்பிக் கமிட்டியும் இணைந்து ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைத்துள்ளனர். அதன்படி 2021 இல் ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்து போட்டிகள்
2020 மே மாதம் நடைபெறவிருந்த ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டு கால் அரையிறுதி போட்டிகளை ஒத்திவைப்பதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் நடைபெறும் தேதிகளைக் குறித்து CAF பின்னர் அறிவிப்பு வெளியிடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
CONCACAF (வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் சங்க கால்பந்து அமைப்பு) நடத்தும் நேஷன்ஸ் லீக் இறுதிப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஜுன் 4 முதல் ஜுன் 7 வரை நடைபெற இருந்த இந்தப்போட்டிகளில் கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் கலந்துகொள்ளப்பட இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது இந்த போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்புகள் இன்னும் வெளியாக வில்லை.
ரஷ்யா லீக் கால்பந்து- மார்ச் 17 ஆம் தேதி ரஷ்யா கால்பந்து யூனியன் தனது அனைத்துப்போட்டிகளையும் ஏப்ரல் 10 வரை தள்ளி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஐரோப்பாவில் நடைபெறும் மிகச் சிறந்த விளையாட்டுப் போட்டியாக ரஷ்ய லீக் கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் முதலிடம் வகிக்கும் Bundesliga கால்பந்து போட்டிகள் மார்ச் 13 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பயிற்சி வீரர்கள் ஏப்ரல் 5 வரை பயிற்சியில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கேமரூன் கால்பந்து- இந்த மாதத்தில் நடைபெறவிருந்த ஆப்பிரிக்க நாடுகளின் சாம்பியன்ஷிப் 2020 கால்பந்து போட்டிகள் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிக்கை மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் 2021 க்கு ஒத்திவைக்கப்படுவதாக தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான CONMEBOL மார்ச் 17 அன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 12 அணிகள் கொண்ட இந்தப்போட்டிகள் ஜுன் 12 முதல் ஜுலை 12 வரை கொலம்பியா, அர்ஜென்டினா வில் நடைபெற இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூரோ 2020 கால்பந்து போட்டி 2021 க்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. UEFA நிர்வாகக் குழு ஒருங்கிணைத்த 2020 யூரோ கால்பந்து போட்டிகள் 24 அணிகள் ஜுன் 12 முதல் ஜுலை 12 வரை விளையாட இருந்தன. இந்தப்போட்டிகள் 12 நாடுகளில் நடத்தப்பட இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 2021 ஜுன் 11 முதல் ஜு 11 வரை இந்தப்போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்து நடைபெறவிருந்த அனைத்து பெரிய கால்பந்து போட்டிகளும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆசிய உலகக்கோப்பைக்கான தகுதிப்போட்டிகளையும் FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது. சீன, ஜப்பான் மற்றும் தென்கொரியா வில் நடைபெறும் லீக்போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆசிய ஷாம்பியன்ஷிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மெக்சிகோவில் நடைபெற இருந்த கண்காட்சி கால்பந்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறவிருந்த நேஷனல் லீக்கின் மூன்று பிரிவுகளும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
மாரத்தான் போட்டிகள்
ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த லண்டன் மாரத்தான் போட்டி அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல போஷ்டன் மாரத்தான் ஏப்ரல் 4 தேதியிலிருந்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் மற்றும் பார்சிலோனா மாரத்தான்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நடைபெறும் முக்கிய மாரத்தான் போட்டி மார்ச் 1 ஆம் தேதியன்று கட்டுப்படுத்தப்பட்ட 200 வீரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தடகளப் போட்டிகள்
ஆகஸ்ட் 2021 இல் ஒரேகானில் நடைபெறவிருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜுலை 2022 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கத்தார், சீனா, ஸ்டாக்ஹோம், நேபிள்ஸ் மற்றும் ரபாத் ஆகியவற்றின் 2020 சீசன் தடகளப் போட்டிகளை டயமண்ட் லீக் அமைப்பு ஒத்திவைத்திருக்கிறது. மார்ச் 13-15 ஆம் தேதிகளில் நாஞ்சிங்கில் நடைபெற விருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஃபார்முலா 1
ஆஸ்திரேலியா மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த GP ஃபார்முலா 1 போட்டியை ரத்து செய்திருக்கிறது. பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், வியட்நாம் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவிருந்த ஷாங்காயின் சீன கிராண்ட் பிரிக்ஸ் ரத்து செய்யப்பட்டது. மே மாதத்தில் நடைபெறவிருந்த ஸ்பெயின், மொனாக்கோ பந்தயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபார்முலா 1 கனடிய கிராண்ட் பிரிக்ஸ் அமைப்பும் போட்டிகளை ஒத்திவைத்திருக்கிறது.
கிரிக்கெட்
மார்ச் 16 இல் மலேசியாவில் நடைபெறவிருந்த ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சவால் லீக் ஏ ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் மார்ச் 29 இல் தொடங்கவேண்டிய லீக் டி20 போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் அரங்கத்தின் பார்வையாளர்கள் இல்லாமலே நடைபெறும் என அறிவித்து இருந்தது. இங்கிலாந்தில் மார்ச் 19 ஆம் தேதி நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சுற்றுப்பயணப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜுடோ
சர்வதேச ஜுடோ கூட்டமைப்பு ஏப்ரல் இறுதிவரை அனைத்து ஒலிம்பிக் தகுதிக்கான போட்டிகளையும் ரத்து செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பளு தூக்குதல்
ஏப்ரல் 16 முதல் 25 வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டென்னிஸ் போட்டிகள்
2020 விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. ITF பெட் கோப்பையின் இறுதிப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ITF இதுவரை 900 சுற்றுகளை ஒத்திவைத்தாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு ஓபன் போட்டிகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை போட்டிகள்
உலகக் குத்துச்சண்டை ஹெவிவெயிட்டின் முதன்மை போட்டியான பிரிட்டன் அந்தோனி ஜோசுவா மற்றும் பல்கேரியாவின் குப்ரக் புலேவ் ஆகியோருக்கு இடையிலான போட்டி ஜுன் 20 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. தற்போது இந்தப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரின் மைதானத்தின் நடத்தப்படவிருப்பதாகவும் தெரிகிறது.
கூடைப்பந்து போட்டிகள்
அமெரிக்காவின் கூடைப்பந்து சங்கம் கொரோனா முடியும் வரை அனைத்துப் போட்டிகளையும் ஒத்திவைத்திருக்கிறது. டென்னிஸில் முக்கிய போட்டிகளான WNBA 2020 வழக்கமான சீசனைவிட்டு மாற்றிவைக்கப்பட்டு இருக்கிறது.
பேஸ்பால்
தைவானில் ஒலிம்பிக்கிற்னா இறுதி தகுதிப் போட்டிகள் நடைபெறவிருந்தன. இந்தப்போட்டிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பேஸ்பால் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு பயிற்சிகளையும் ரத்து செய்திருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout