'கேம் சேஞ்சர்' ஆரம்பம் தான்.. தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர், இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் திரு. ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.
'கேம் சேஞ்சர்' படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக 'கேம் சேஞ்சர்' படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, "21 ஆண்டு கால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் 'கேம் சேஞ்சர்' என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன். 'கேம் சேஞ்சர்' மட்டுமில்லை, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்."
முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
"எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது. கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்," என்று கூறினார்.
ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, "ஊடகம் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்களை நான் சந்தித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக சந்திக்கிறேன். 'நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்' என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ சார் கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்."
"எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதன்பிறகு, நான் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது தில் ராஜூ சாரின் ஆதரவுக்கு நன்றி கூறி, 'கேம் சேஞ்சர்' திரைப்படத்துடன் கம்பேக் கொடுப்பதில் சுவாரஸ்யமாக இருக்கிறேன். இருவரும் அதிக தமிழ் மற்றும் பான் இந்தியன் படங்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் சரியான இயக்குநர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். தில் ராஜூவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் சரியான கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் விதம் தான். இத்துடன் அவரது அசாத்திய தயாரிப்பு பணிகள் என்னை கவர்ந்துள்ளது. அதிகளவு பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொண்ட வெகு சில தயாரிப்பாளர்களில் அவர் ஒருவர். ஆதித்யாராம் மூவிஸ் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க ஆர்வம் மற்றும் பெருமை கொண்டுள்ளது," என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments