சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்
- IndiaGlitz, [Monday,November 12 2018]
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, புயலாக மாறி அதற்கு கஜா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என நேற்று வரை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்த நிலையில் கஜா புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கஜா புயல் வரும் 15-ம் தேதி கரையை சென்னை - நாகை இடையே கடக்கவிருப்பதை அடுத்து சென்னை உள்பட வட தமிழகத்தில் ஒரே நாளில் 20 செமீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 880 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கஜா புயல் கரையை கடந்தாலும் வர்தா புயல் அளவுக்கு பாதிப்பு இருக்காது என்றும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கஜா புயல் தமிழகத்தில் கரையை கடக்கவிருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையை இன்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நடத்தவுள்ளார்.