கஜா புயலினால் நாதியற்று தவிக்கும் கிராமங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
வர்தா புயலில் சென்னை எப்படி தவித்ததோ அதே நிலை தான் இன்று புதுக்கோட்டைக்கு என தவறாக பதிவிட்டு விட்டேன்.
தானே, வர்தா, ஓகி புயல் தாக்கத்தை எல்லாம் தாண்டிய வேறு மாதிரியான பாதிப்பு டெல்டா மக்களுக்கு. மூன்று நாட்களைத் தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். என்னிடம் தகவல் கேட்கும் நண்பர்கள் புயல் பாதிப்புகளை மிகப் புதிதாய் கேட்பது போல் கேட்கிறார்கள். அவர்களுக்கே அதுவரை டெல்டா மக்கள் இப்படி பாதிக்கப்பட்டிருப்பது தெரியாதது தான் வேதனை.
சிம்பிள், புதுக்கோட்டையில் நகர்ப்பகுதியில் நிறைய மளிகை கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள் இருக்கும். இதில் சரி பாதி கடைகள் புயலால் காலியாகி இருப்பது வேறு கதை. ஆனால், கிராமங்களில் அப்படி இல்லை. ஊருக்கு நடுவில் இரண்டு மளிகை கடை இருப்பதே அரிது. கூரை வேய்ந்த அந்தக் கடைகளும் தற்போது சுக்கு நூறாய் இருக்கிறது. சரி, பக்கத்து கிராமத்துக்குச் சென்று பொருள்கள் வாங்கலாம் என்றால், அந்தக் கிராமத்துக்கு செல்வதில் சிக்கல். காரணம், வழிநெடுக மரங்கள் வீழ்ந்து கிடக்கிறது. அதனை இன்னும் அகற்ற யாரும் வரவில்லை. அந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டு வர மூன்று வார காலம் ஆகலாம் என்கிறார்கள். அவர்கள் என்ன உணவு மூன்று நாட்களாக சாப்பிடுகிறார்கள்? நல்ல குடிநீருக்கு என்ன செய்கிறார்கள்? என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.
இதுதான் இன்றைய டெல்டா மக்களின் நிலை. நிவாரணப் பொருட்கள் வழங்க நினைக்கும் கரங்களும், கால்களும் கிராமங்களை நோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
நகர்ப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், கிராமங்கள் அப்படி இல்லை, புதுக்கோட்டையில் இருந்து மிகத்தொலைவில் உள்ள என் நெருங்கிய உறவினருக்கு சொந்தமான தோப்பில் உள்ள 400க்கும் அதிகமான தென்னை மரங்களில் 85% மரங்கள் வீழ்ந்து விட்டது. பித்து பிடித்தது போல் இருக்கிறார்கள். அதனருகருகே சிறிய அளவில் 40, 60 மரங்கள் கொண்டு தோப்பு வைத்திருந்தவர்கள் 100% அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. இதனை எப்படி அரசு ஈடுகட்டும்?
அப்படி ஈடு கட்டினாலும், அது எத்தனை நாட்களுக்கு அவர்களுக்கு அது நிவாரணம் அளிக்கும்?
இது வேறு ஒரு மாதிரியான பாதிப்பு. ஒட்டுமொத்த தமிழ்நாடும் 8 டெல்டா மக்களுக்கு துணை நிற்க வேண்டிய நேரம்.
சென்னைக்கு புயல் வந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் கை கொடுத்தது? ஆனால், டெல்டா மக்களுக்கு?
கேரளாவில் வெள்ளம் வந்தபோது பிரார்த்தனை செய்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அப்படி அனுப்பி வைத்த புதுக்கோட்டை மக்கள் இன்றைக்கு உணவின்றி தவிக்கிறார்கள். தயவு செய்து இதனை வெளியில் தெரியப்படுத்தவாது செய்யுங்கள்.
மீண்டும்... ஆதரவுக்கரம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து நாதியற்று தவிக்கும் கிராமங்களை நோக்கி இருக்கட்டும்...
- Nagaa Athiyan
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout