கஜா புயல் எதிரொலி: சென்னை மெரினாவில் பொதுமக்கள் வெளியேற்றம்
- IndiaGlitz, [Thursday,November 15 2018]
வங்கக்கடலில் உருவான 'கஜா' புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் சமயத்தில் சுமார் 120 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் சுமார் 20 செமீ மழை அதிகபட்சமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் இந்த புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது என்றும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். மேலும் கடற்கரை சாலை முற்றிலும் மூடப்பட்டுள்ளதால் அந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.