கஜா புயலால் திக்கற்று நிற்கும் தென்னை விவசாயிகள்
- IndiaGlitz, [Tuesday,November 20 2018]
கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தின் தீவிரம் இன்னும் பலருக்கு புரியவில்லை. பொதுவாக புயல் அடிக்கும்போது மரங்கள் சாய்வது, வீடுகள் சேதம் அடைவது போல் இந்த புயலையும் பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இந்த புயலினால் மீண்டுவரவே முடியாது அளவுக்கு பலர் குறிப்பாக தென்னை விவசாயிகள் உள்ளனர்.
புயல், கனமழை, வெள்ளம் ஏற்படும்போது நெல் போன்ற பயிர்கள் சேதம் அடைந்தால் அந்த காலகட்டத்தில் பயிரிட்ட பொருட்கள் மட்டுமே சேதம் ஆகும். அடுத்த வெள்ளாண்மையில் அதாவது ஆறே மாதங்களில் மீண்டும் விவசாயம் செய்து லாபம் பார்க்க வாய்ப்பு உண்டு.
ஆனால் தென்னை விவசாயம் அப்படி அல்ல. முதல் ஐந்து வருடங்களில் தென்னை விவசாயிகளுக்கு எந்த வருமானமும் இருக்காது. மாறாக தென்னைகளை பராமரிக்க வேண்டிய செலவுதான் அதிகம் இருக்கும். ஐந்தாவது வருடத்தில் பாலைவிடும் தென்னை மரங்கள் சுமார் பத்து வருடங்கள் கழித்துதான் காய் காய்க்கும். பதினைந்தாவது வருடம் முதல் பலன் தர ஆரம்பிக்கும் தென்னை மரங்கள் சுமார் 100 வருடங்கள் வரை நிலையான வருமானத்தை தரும். ஒரு ஏக்கரில் சுமார் 100 மரங்கள் விவசாயம் செய்து 15 வருடங்கள் கஷ்டப்பட்டால், பரம்பரைக்கே அந்த தென்னை மரங்கள் வருமானம் கொடுக்கும் என்பதால் பலர் நீண்டகால பயனை கருதி தென்னை மரங்களை விவசாயம் செய்துள்ளனர்.
ஆனால் கஜா புயலினால் விவசாயம் செய்யப்பட்ட 90% தென்னை மரங்கள் வீழ்ந்துவிட்டது. அதாவது அந்த பகுதி விவசாயிகளின் கனவு சிதைந்துவிட்டது. மீதி 10% மரங்களும் காய்க்கும் வகையில் இல்லாததால் கிட்டத்தட்ட அந்த விவசாயிகள் மீண்டும் முதலில் இருந்து தங்கள் விவசாயத்தை தொடங்க வேண்டும். இது சாத்தியமா? என்று தெரியவில்லை. எனவே இதுவொரு எண்ணிப்பார்க்க முடியாது இழப்பு. அரசு இந்த இழப்பை எப்படி சரிசெய்ய போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி
மேலும் பல மாணவர்கள் விவசாய படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தங்களுடைய கல்வி அறிவை தென்னை விவசாயத்தில் முதலீடு செய்துள்ளனர். ஒருசிலர் நல்ல வேலையை விட்டுவிட்டு தென்னை விவசாயம் பார்த்து வந்தனர். இவர்களின் எதிர்காலம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
பார்த்து பார்த்து தென்னை விவசாயம் செய்து, உரம்போட்டு பிள்ளைகளை போல் வளர்த்த தென்னம்பிள்ளைகள் இன்று வீழ்ந்து கிடப்பது பெற்ற பிள்ளைகள் பிணமாக இருப்பதற்கு சமமாக உள்ளது. தென்னை விவசாயிகள் மனதளவில், பொருளாதார அளவில் வீழ்ந்து கிடப்பதை மனதில் எண்ணி அவர்களுக்கு ஆறுதல் மட்டுமின்றி நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன்வருவோம். நாம் செய்யும் உதவிகள் அவர்களின் இழப்புகளுக்கு ஈடாகாது என்றாலும் அவர்கள் மனக்கவலைகளை ஓரளவிற்கு ஆற்றும் வகையிலாவது இருக்கும் என்று நம்புவோம்.