டப்பிங் பேசும் போது மாரடைப்பு.. தானே காரை ஓட்டி மருத்துவமனைக்கு சென்ற ஜி மாரிமுத்து..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் மாரிமுத்து உடன் ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த கமலேஷ் என்பவர் இதுகுறித்து கூறிய போது ’எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வெளியே சென்று தானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். பிறகு அவரின் மகளை தொடர்பு கொண்ட போது தான் அவர் இறந்த விவரம் தெரிய வந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் மாரிமுத்துவின் மாரிமுத்துவின் உடல் தற்போது அவரது சாலிகிராம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு என்ற பகுதிக்கு இன்னும் சில மணி நேரங்களில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதாவது:

சுரேஷ் காமாட்சி: டப்பிங் பேசும்போதே மரணம். சினிமாவில் வாழ்ந்து சினிமாவோடு மரணித்திருக்கிறார் அண்ணன் நடிகர் திரு மாரிமுத்து அவர்கள். எப்போதும் எல்லோரிடமும் தொடர்பிலேயே இருக்க விரும்புபவர். அவரின் ஆன்மா இறை மடியில் இளைப்பாறட்டும். குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வம்: அவரது மறைவு செய்தியை கேட்டது கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லியிருந்தார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகியிருந்தால், அது வேறு. ஆனால் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது குடும்பத்தினர், ‘எதிர்நீச்சல்’ டீம், ரசிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய இழப்பு. நாங்கள் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் அனைவருமே மருத்துவமனையில்தான் இருக்கிறோம். இதற்கு மேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

கவிஞர் வைரத்து:

தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்