ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய இறுதி ஊர்வலம்!!! வருத்தம் தெரிவித்து உரையாற்றிய மேயர்!!!
- IndiaGlitz, [Thursday,June 04 2020]
கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு செவ்வாய்கிழமை அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது. உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் சொந்த ஊரான ஹூஸ்டன் நகரில் தொடங்கப்பட்ட இந்த இறுதி ஊர்வலத்தை பாடகர்கள் ட்ரே தாடுரூத் மற்றும் பன்பி ஆகியோர் வழிநடத்தினர். ஹூஸ்டன் நகர் பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சிட்டி ஹொல் வரை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. ஊர்வலத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மிகவும் அமைதியான முறையிலும் இன்னிசை வாத்தியங்கள் மற்றும் கோஷங்களோடு நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
டெக்சாஸ் நகர மேயர் கிரெக் அபோட் மற்றும் ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்ப உறுப்பினர்கள் 16 பேரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள், கட்சி ஆளுமைகள், மாணவர்கள், ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகிறது. மேலும் அந்நகரத்தின் மேயர் சில்வெஸ்ட்ர் டர்னரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். அதில் “இன்று நாம் அவர்களை நேசிக்கிறோம். ஜார்ஜ் மரணம் வீணாக போகவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று கூட்டத்தைப் பார்த்து பேசியிருக்கிறார்.
மேலும், எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் மேயர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். போராட்டங்கள் ஒருபோதும் வன்முறையாக மாறக்கூடாது எனவும் வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய காவல்துறை அதிகாரி அசெவெடா ஃபிளாய்ட் மரணம் வழியாக மாற்றம் வருகிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மே 25 ஆம் தேதி ஆரம்பிக்கப் பட்ட பல்வேறுகட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தற்போது அமெரிக்காவில் வலுவிழந்து வருகின்றன. குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரி மீது அதிகபட்ச வழக்கு தொடுக்கப் பட்டு இருக்கிறது. எதிர்ப்பாளர்களின் குரலுக்கு உலகம் முழுவதும் ஆதரவு தெரிவிக்கப் பட்டு வருகிறது. ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் கறுப்பினத்தவர்களின் போராட்டங்கள் தற்போது ஓரளவு வெற்றிப்பெற்று இருப்பதாகவும் கருதப்படுகிறது.