மதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததை அடுத்து சமீபத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 5 வரை மதுரையில் முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜூலை 6 முதல் ஜூலை 12 வரை மேலும் ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளையுடன் முழு முடக்கம் நிறைவடையும் என்பதால் நாளை மறுநாள் முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு இந்த முழு ஊரடங்கை திடீரென நீட்டிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அப்பகுதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,703 என அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மதுரையில் இதுவரை 51 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பதும் 967 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.