கர்நாடகாவில் முழு ஊரடங்கு...! கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்...!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

கர்நாடகாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் செல்வதற்கு ஆயிரக்கணக்கில் விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், அங்கு தொடர்ந்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை முதல்வர் எடியூரப்பா பிறப்பித்துள்ளார். மே -10-ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு இருப்பதால், அங்கு பொதுப்போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட தடை எனவும், பிறதொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பெங்களூரில் பணிபுரியும் பலரும், தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வந்து குவிந்து இருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக, பலர் டிக்கெட்டுகள் எடுத்திருந்தும் படிக்கட்டுகளில் அமர்ந்து செல்லும் அபாய நிலையே ஏற்பட்டிருந்தது.

நேற்று இரவு வரை சுமார் 625 அரசு பேருந்துகளை கூடுதலாக கர்நாடக போக்குவரத்து கழகம் இயக்கிய போதும், மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் தனியார் பேருந்துகளை நோக்கி செல்ல ஆரம்பித்தினர். ஆனால் டிக்கெட்டின் விலையோ மக்களை மூச்சடைக்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். வழக்கமாக பெங்களூரில் இருந்து பெலகாவி செல்வதற்கு ரூ.1000-ம் தான் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நேற்று இணையதளத்தில் தனியார் பேருந்துகளில் புக் செய்தவர்களுக்கு ரூ.6,667-ஐ வசூல் செய்துள்ளார்கள். இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊரடங்கு இருக்காது என அரசு அறிவித்திருந்த காரணத்தால், பெங்களூரு வந்த மக்கள் தற்போது வருமானம் இல்லாமலும், ஊருக்கு திரும்பி செல்ல முடியாமலும் தவித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.