டெல்லியில் முழு ஊரடங்கு....! முதல்வர் அதிரடி அறிவிப்பு...!
- IndiaGlitz, [Monday,April 19 2021]
கொரோனா தீவிரமாக பரவி வருவதால், தலைநகரான டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் அலையாக கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களிலும், டெல்லி தலைநகரிலும் தொற்றின் பாதிப்பு தீயாய் பரவி வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் சரியாக இல்லாதது, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வருவதால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கை மீண்டும் பிறப்பித்து வருகின்றன.
துவக்க காலத்தில் இரவு நேரங்களிலும், வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தினசரி பாதிப்பு என்பது அதிகமாகி வருவதால், இந்தியாவில் முதல் மாநிலமாக மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைநகரான டெல்லியிலும், இன்றிரவு முதல் வரும் ஏப்ரல்-26-ஆம் தேதி வரை முழுஉரடங்கை பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த உத்தரவை முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.
டெல்லி முதல்வரின் தலைமையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவமனைகளுக்கு சுமையை குறைக்கவும், வேறுவழி இல்லாமலும் இந்த முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சிறிய அளவிலான ஊரடங்கு தான், அதனால் புலம்பெயரும் தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்ல வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.