அடுத்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
- IndiaGlitz, [Monday,April 26 2021]
கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு, முழு ஊரடங்கு என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அரசு தொடர்ந்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 34,000 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இன்று மதியம் இதுகுறித்து அமைச்சர்களிடம் அவசர ஆலோசனை நடத்தினார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அதன்பின் செய்தியாளர்களை சந்திந்த அவர் கூறியிருப்பதாவது,
கர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய அரசு நம் மாநிலத்திற்கு, ஆக்சிஜன் விநியோகத்தை 300 மெட்ரிக் டன்னிலிருந்து, 800 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 27-ஆம் தேதி இரவு 9 மணி முதல், தொடர்ந்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்புதான் இந்த முடிவெடுக்கப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்கப்படும். பெங்களூரு மெட்ரோ, ஆர்.டி.சி பேருந்துகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சரக்குப்போக்குவரத்துகள் மட்டும் பிறமாநிலங்களுக்கு செல்ல அனுமதி உண்டு. மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பார்சல் மட்டும் பெற்று செல்ல அனுமதி.
கர்நாடகாவில் 45 வயதிற்க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தும் திட்டம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது 15 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சரியான நேரத்தில் விற்பனையை முடித்துக்கொள்ள தாமாக முன்வரவேண்டும். உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான வேலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கார்மெண்ட் நிறுவனங்கள் இயங்க தடைசெய்யப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியில் வரலாம்,ஆனால் காவல்துறையினர் கட்டாயப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதை தவிர்த்திடுங்கள். தாசில்தார், நோடல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். விதிகளை மீறி நடந்துகொள்பவர்கள் மீது, துணை ஆணையர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார். மக்களாகிய நீங்கள் ஒத்துழைத்தால் தான், கொரோனாவை விரட்டியடிக்கமுடியும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.