நாளை முதல் அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர்: அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,May 29 2018]
காவிரி பிரச்சனை, தூத்துகுடி துப்பாக்கி சூடு பிரச்சனை போன்ற பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே இன்று தமிழக சட்டசபை கூடியது. தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு சட்டையணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியதும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இந்த பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை என சபாநாயகர் கருத்து தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தூத்துகுடி ஆலையை நிரந்தரமாக மூடும் வரையிலும், முதல்வர் பழனிச்சாமி பதவி விலகும் வரையிலும் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடைபெறும் என திமுக அறிவிப்பு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் போட்டி சட்டமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.