தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் ஓடலாம்: ஆனால் ஒரு நிபந்தனை
- IndiaGlitz, [Friday,May 22 2020]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர். இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள் ஓரளவுக்கு தளர்வுகளை அறிவித்து வருவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதன்படி விமானங்கள் வரும் 25ம் தேதியும், ரயில்கள் வரும் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்தும் இயக்கப்பட உள்ளன. இதனை அடுத்து ஆட்டோக்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது
மேலும் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே இயக்கலாம் என்றும் ஒரு ஆட்டோவில் ஒரு பயணியை மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு நாளை முதல் சென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்களை ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் ஒரு ஆட்டோவில் ஒரு நபர் மட்டுமே செல்லலாம் என்பது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்பது போகப்போகத்தான் தெரியும். மேலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாதது போலவே ஆட்டோக்களுக்கும் அனுமதி இல்லை என்பது சென்னை மக்களுக்கு அதிருப்தியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது