மீண்டும் தொடங்கும் 'தங்கலான்' படப்பிடிப்பு.. விக்ரமுடன் யார் இணைகிறார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,June 17 2023]
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரிகர்சலில் இருந்த விக்ரமுக்கு சிறிய காயம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் முழு ஓய்வு எடுத்தார்.
இந்த நிலையில் தற்போது விக்ரம் முழுமையாக உடல் நலம் பெற்றதை அடுத்து மீண்டும் இன்று முதல் அவர் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் தயாராக இருக்கும் செட்டில் இன்று முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விக்ரமுடன் மாளவிகா மோகனன் இணைந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நேற்றே மாளவிகா மோகனன் சென்னைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம், மாளவிகா மோகனன் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் மொத்தம் 15 நாள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.