சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' படம் திடீர் நிறுத்தம்: காரணம் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,April 04 2018]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் வேறு வழியில்லாமல் ஏற்கனவே ரிலீசான படங்களையும், தெலுங்கில் ரிலீஸ் ஆன படங்களையும் திரையிடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' திரைப்படம் வெகுநாட்களுக்கு பின்னர் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை கொடுத்தது. மேலும் விரைவில் மகேஷ்பாபு உள்பட ஒருசில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தமிழ் திரை உலகிற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தெலுங்கு திரைப்படங்கள் எதுவும் ஏப்ரல் 8-ம்தேதி ஞாயிறு முதல் தமிழ் நாட்டில் வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே ரிலீஸ் செய்து வெற்றி நடை போட்டு வரும் ராம்சரன், சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலா’ படமும் ஞாயிறு முதல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். திரை உலகின் நலனுக்காக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவால் தமிழ் – தெலுங்கு திரைப்பட உலகிற்கும் இடையே நட்பு மேலும் வலுவாக உதவும் என்றும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் மீண்டும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது