பெயர் மாற்றப்பட்ட “பேஸ்புக்“… CEO அறிவிப்பு!
- IndiaGlitz, [Friday,October 29 2021]
சமூகவலைத்தள நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் “பேஸ்புக்“கின் பெயர் மாற்றப்பட்டு புதிதாக “மெட்டா“ எனும் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பரவலான மக்களால் பேஸ்புக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளும் நிர்வாகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் அதன் ஒருங்கிணைந்த புதிய சேவை வசதிக்காக பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
அந்த வகையில் தற்போது பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டு “மெட்டா” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது என சமீபத்தில் நடைபெற்ற அந்நிறுவன ஆண்டுக் கூட்டத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் மெட்டாவெர்ஸ் நோக்கி பயணிக்கிறது என்றும், அதே கோணத்தில் பேஸ்புக் தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும் அதைப் பிரதிபலிக்கும் விதமாக நிறுவனத்தின் பெயரை மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும் அது அனைத்தையும் கொண்ட புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டு உள்ளதே தவிர அவற்றின் ஆப்களும் பிராண்டுகளும் மாறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.