சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் தேதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,June 05 2020]
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் ஒன்றாக வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை நிபந்தனையுடன் திறக்கலாம் என அறிவித்திருந்தது
இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை திறக்க ஆலோசனை செய்து வருகின்றன. தமிழகத்திலும் இது குறித்து ஆலோசனை சமீபத்தில் நடைபெற்றது என்பதும் வரும் 8ம் தேதி முதல் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் உள்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 பேர் வரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் கூடுவார்கள் என்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்களை ஒழுங்குபடுத்த தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்