"கார்மென்ட்ஸ் சரவணன்" முதல் "அகரம் சூர்யா" வரை.....!பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் நன்மனிதராகவும் விளங்கி வருபவர் தான் சூர்யா. குணசித்திர நடிகரான சிவக்குமார் அவர்களின் முதல் புதல்வன் தான் சூர்யா என்கிற சரவணன். எப்போதுமே பெண்கள் ரசிகைகள் இவரை கொண்டாடத் தவறியதில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் புதுமையை காண்பித்து, சார்ம் பாயாக வலம் வருகிறார். சூர்யாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர் தான், சூலூர் அருகே உள்ள காசிகவுண்டன்புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் சிவக்குமார் அவர்கள். சினிமா வாய்ப்பிற்காக சென்னை வந்தவர், குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இளமை காலம்:
சிவக்குமார், லக்ஷ்மி தம்பதிக்கு 1975-இல், ஜீலை-23 அன்று தலை மகனாக பிறந்தவர் தான் சூர்யா.
சூர்யா தனது பள்ளிப்படிப்பை சென்னையில் இருக்கும், செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பத்ம சேஷாஸ்ரி பவன் பள்ளிகளில் படித்து முடித்தார். லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இவரின் கல்லூரி நண்பராக விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இருந்து வந்தனர். தமிழ் திரையுலகில் தனிப்பெரும் நடிகராக விளங்கி வருபவர் தான், இவரது தம்பி கார்த்தி. தங்கை பிருந்தாவும் பாடகராக வலம் வருகிறார்.
பிரபல நடிகர் என்ற அதிகார மமதை இல்லாத சிவக்குமார், அவரது மகன்களையும் மிக எளிமையாகவே வளர்த்தார்.
முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும், சினிமா வாய்ப்புகள் அவருக்கு எளிமையாக கிடைக்கவில்லை. ஆரம்ப காலங்களில் ஆடை தயாரிப்பு துறையில் சூர்யா ஆர்வமாக இருந்ததால், சாதாரண தொழிற்சாலையில் 8,000 ரூபாய்க்கு பணியில் சேர்ந்தார். இதன்பிறகு தான் இயக்குனர் வசந்த் புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய, அந்த வேலையிலிருந்து விலகினார்.
திரையுலகில் கால் பதித்தது எப்படி...?
தமிழ் சினிமாவில் அறிமுகமானது 1997-இல் தான். இயக்குனர் வசந்த் அறிமுகத்தில், மணிரத்னம் தயாரிப்பில், நடிகர் விஜயுடன் இணைந்து ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் நடித்திருப்பார். இதையடுத்து காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1999), பெரியண்ணா (1999), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999), உயிரிலே கலந்தது (2000) உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதன்பிறகு 2001-இல் வந்த ஃபிரண்ட்ஸ் திரைப்படம் தான் வெற்றிப்படமாகவும், சூர்யா வாழ்வில் முக்கிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதேவருடம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, "நந்தா" திரைப்படம் தான் மாபெரும் நடிகர் என்ற பெருமையை சூர்யாவிற்கு பெற்றுத்தந்தது. இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார். இதற்காக தமிழ்நாடு மாநில அரசின் விருதையும் அவர் பெற்றார்.
உன்னை நினைத்து (2002), ஸ்ரீ (2002), மௌனம் பேசியதே (2002) உள்ளிட்ட படங்களில், காதல் நாயகனாக வலம் வந்து கன்னியர் மனதை கவர்ந்த சூர்யா, 2003 -இல் வெளியான பிதாமகன் படத்தில் தனது நகைச்சுவையான நடிப்பையும் வெளிப்படுத்தி லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார்.
இதுவரை சார்ம் பாயாக வலம் வந்த சூர்யாவை, ஆக்ஷ்ன் போலீசாக காக்க காக்க (2003) திரைப்படம் மூலம், சினிமாவிற்கு கொடுத்தது கௌதம் மேனன் தான். இதில் வந்த ரொமேன்டிக், ஆக்சன் காட்சிகள் சூர்யாவை வேறு கோணத்திற்கு எடுத்து செல்ல வைத்தது.
2004-இல் வந்த பேரழகன் திரைப்படத்தில், இரட்டை வேடத்தில் புதுவித நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இதுபோல் மணிரத்னம் இயக்கிய, ஆயுத எழுத்து படத்தில், இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஆழமான கருத்துக்களை முன் வைத்திருப்பார்.
2005-இல் மாயாவி, ஆறு உள்ளிட்ட திரைப்படங்களிலில் நடிக்க, மாபெரும் ஹிட் கொடுத்தது 'கஜினி' படம் தான். மாறுபட்ட காதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் லவ்வர் பாயாக வலம் வந்தார்.
2006-ல் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் தான், மாஸ் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு சூர்யாவை வேறு கோணத்திற்கு நகர்த்தியது. அடாவடி கல்லூரி மாணவராகவும், அடக்கமான குடும்ப கணவனாகவும் தோன்றியது, ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு கிடைத்தது.
இதன்பிறகு வெளியான வேல் (2007), வாரணம் ஆயிரம் (2008), அயன் (2009), ஆதவன் (2009), சிங்கம் (2010) போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து குவித்தது.
ரத்த சரித்திரம்(2010), ஏழாம் அறிவு(2011), மாற்றான் (2012) உள்ளிட்ட திரைப்படங்கள் ஓரளவு தான் ஓடினாலும், வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் முன்னணியாக இடம்பிடித்தார். சினிமா குறித்து முன் அனுபவம் இல்லாத சூர்யா, திரையுலகில் கால்பதித்த நாள்முதல், தனக்கான தனித்திறமையை குறுகிய காலத்தில் வளர்த்துக்கொண்டார். வாரணம் ஆயிரம் படத்தில் உடல் எடையைக் குறைத்துக் கொண்டு, ‘சிக்ஸ் பேக்ஸ்’ என்ற உடலமைப்பை அறிமுகப்படுத்தி, தலைசிறந்த நடிகராக உருவெடுத்தார்.
மன்மதன் அம்பு, கோ, அவன் இவன் உள்ளிட்ட படங்களில், கௌரவத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.
கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த சூர்யா சிங்கம்2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்களிலும், கெத்தான டான் கதையம்சமுள்ள அஞ்சான், மாஸ் படங்களிலும் நடித்தார். ஆனால் இவை எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஆனால் 2016-இல் வெளியான 24 திரைப்படத்தில், ஹீரோ, வில்லன், தந்தை என மூன்று தோற்றங்களிலும், அசத்தலாக நடித்திருப்பார். தான சேர்ந்த கூட்டம், காப்பான், என்ஜிகே போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை மட்டுமே தந்தாலும், ஒவ்வொரு படத்திலும் நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் குறித்து பேசியிருப்பார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான "சுரூரைப் போற்று" திரைப்படம் தான், சூர்யாவை உலகளாவிய நடிகராக எடுத்துச் சென்றது. ஆஸ்கரின் நாமினேஷன் வரை சென்றது. இப்படம் மூலம் சூர்யா கோடிக்கணக்கான ரசிகர்களின் ரோல் மாடலாக உருவெடுத்து வருகிறார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் "எதற்கும் துணிந்தவன்" படத்திலும் நடித்து வருகிறார். 2022 தமிழ் சினிமாவில் சூர்யாவின் வருடமாக இருக்கலாம் என ரசிகர்கள் வருகிறார்கள்.
தொகுப்பாளராக:
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2012-இல் வெளியான, ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற கேம் ஷோ மூலம், நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். அதே வருடம் ஜூலை மாதம் வரை அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
விளம்பரங்கள்:
டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்ஃபீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, நெஸ்கஃபே, ஜண்டு பாம், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட், மலபார் கோல்ட் உள்ளிட்ட விளம்பரங்களில் விளம்பர தூதராக சூர்யா இருந்து வருகின்றார்.
காதல் வாழ்க்கை:
பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், படங்களில் நடித்ததன் மூலம் ஜோதிகா மீது, காதல் வயப்பட்ட சூர்யா, பெற்றோர் சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தேவ் என்ற மகனும், தியா என்றமகளும் உள்ளனர்.
தயாரிப்பாளராக:
தன்னுடை தயாரிப்பு நிறுவனமான "2டி எண்டர்டைன்மென்ட்" மூலம், நல்ல ஸ்கிரிப்ட் அமைந்துள்ள, கதையம்சமுள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 36 வயதினிலே, பசங்க-2, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி-2, 24, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று உள்ளிட்ட திரைப்படங்களை, சூர்யா தயாரித்துள்ளார்.
புத்தகம் :
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான சுவாரசிய சம்பவங்கள் குறித்து "இப்படிக்கு சூர்யா" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
பாடகராக"
அஞ்சான் படத்தில் "ஏக் தோ தி சான்" பாடலையும், சுருரைப்போற்று படத்தில் "கிட்டவந்து பாருடா" பாடலையும் பாடியுள்ளார்.
சமூகத்திற்கான சேவை:
குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்காக "அகரம் பவுண்டேஷன்" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, தன்னலமில்லாமல் அவர்களுக்காக சேவை செய்து வருகிறார். புலிகளை காக்க வேண்டும் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தார். லாபநோக்கமில்லாமல் இயங்கி வரும் அவரது தொண்டு நிறுவனத்தால், ஆயிரக்கணக்கான ஏழைக்குழந்தைகள் கல்வி பெற்று சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். காசநோயாளிகளுக்கான இலவச சிகிச்சையும் இவர் மூலம் வழக்கப்படுகிறது. தற்போது மருத்துவர்கள் முதல் பல நிறுவனங்களில் பணிபுரியும் மாணவர்கள் அகரம் மூலம் உருவானவர்களே.
வெற்றிப்படியான விருதுகள்:
காக்க காக்க - ஐடிஎஃப்ஏ (ITFA) விருது - 2003 இல் சிறந்த நடிகர்
பிதாமகன் - ஃபிலிம்ஃபேர் விருது - 2003 இல் சிறந்த துணை நடிகர்
பேரழகன் - ஃபிலிம்ஃபேர் விருது - 2004 இல் சிறந்த நடிகர்
வாரணம் ஆயிரம் - 2008 ல் ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது
அந்த வருடத்திற்கான "ஸ்டைலிஷ் யூத் ஐகான்" என்று, ‘சவுத் ஸ்கோப் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது.
அயன், ஆதவன் - என்டர்டைனர் ஆஃப் தி இயர் - 2009ல் - விஜய் விருது
சிங்கம் - என்டர்டைனர் ஆஃப் தி இயர் - பிக் FM விருது மற்றும் விஜய் விருது
மாற்றான் - சிறந்த நடிகர் - 2012-ல் சினிமா விருது
நந்தா படத்திற்காக, 2001-ல், கஜினி படத்திற்காக 2005-ல், வாரணம் ஆயிரம் படத்திற்காக 2008-ல், தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதையும் பெற்றார்.
சூர்யா குறித்து சில சுவாரசிய விஷயங்கள்:
ஆசை படத்தில் நடிக்க சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்த போது, அதை மறுத்து விட்டார்.
இயக்குனர் மணிரத்னம் தான் இவருக்கு சூர்யா என்ற பெயரை வைத்தார்
தந்தையின் நடிப்பால் ஈர்த்துதான் சினிமாவிற்கு நடிக்கவந்தார், ஆனால் சிறுவயதில் எந்த திரைப்படங்களிலும், குழந்தை நட்சத்திரமாக இவர் நடிக்கவில்லை.
இந்தி திரைப்படமான "குரு"-படத்தின், தமிழ் மொழி பெயர்ப்பில், அபிஷேக் பட்சனுக்கு சூர்யா தான் பின்னணி குரல் கொடுத்திருப்பார்.
சினிமாவில் பலபேரால் ஈர்க்கப்பட்டாலும், கமல்ஹாசனை இவருக்கு மிகவும் பிடிக்கும்.
"அப்பா பேச்சை தட்டாத பிள்ளை" என்ற பெயர் சூர்யாவிற்கு எப்போதும் உண்டு. சிவக்குமாரிடம் இருந்த கற்றுக்கொண்ட 'இதுவும் கடந்து போகும்' என்ற வாசகத்தை வாழ்க்கையில் பின்பற்றும் சூர்யா, தந்தையின் அறிவுரைகள் படியே நடந்துகொள்வார்.
கார்மெட்ன்ஸில் முதன் முதலாக வேலை பார்த்து, தன் தாய்க்கு 1200ரூபாயில் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தார்.
பாக்ஸ் ஆபிசில் முதன் முதலாக 100 கோடியை தாண்டிய படம் சிங்கம்-2.
சூர்யாவின் நீண்ட நாள் கனவு இயக்குனர் ஆக வேண்டும் என்பதே.
'லட்சுமி இல்லம்' என்ற பெயரில் வீடு கட்டி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சூர்யா. கூட்டுக்குடும்ப வாழ்க்கையை பெரிதளவில் விரும்புவார்.
மனதிற்கு தோன்றியதை சரியான முறையில், அளவோடு பேசும் திறமையுடையவர் சூர்யா. 'புதிய கல்விக் கொள்கை', 'நீட் பிரச்னை' போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
மேடையில் பேசிய ஜோதிகா "கோவிலுக்கு பணம் தருவதை போலவே, மருத்துவமனைகளுக்கும் தந்து உதவுங்கள்" என்று கூறியிருந்தார். இது தேவையில்லாமல் சர்ச்சையானது. ஆனால் அந்த இக்கட்டான சூழலிலும் சூர்யா, ஜோதிகாவிற்கு பக்கபலமாக ஆதரவு கொடுத்தார்.
சோர்வாக இருந்த சமயங்களில், பாரதியார் கவிதைகளை வாசிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
தன் குழந்தைகளின் பெயரின் முதல் எழுத்தை தான் "2டி" என்று அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளார்.
குழந்தைகள் படிக்கும், பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார்.
ஏராளாமான விருதுகள் பெற்றும், கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும், மிக எளிமையாகவும், தன்மையுடனுமே நடந்து கொள்வார்.
இளைஞர்களுக்காகவும், மக்களுக்காகவும் மேடைப்பேச்சுக்களில் அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகிறார். குறிப்பாக "எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததும், சினிமாவில் தனக்கென தனிபாணியை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறியதும்" நடிகர் திரு.ரகுவரன் என்று பல பேட்டிகளில் கூறியிருப்பார்.
தற்போது ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள "நீட் தேர்வுக்கு" சூர்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரையுலகள் பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சூர்யாவின் பலம் தெரியாமல் சில சில்வண்டுகள், அவரை குறித்து கொச்சையாகவும், தவறாகவும் பேசி வருகிறார்கள். சூர்யா சமூகத்திற்காக செய்தது ஒருதுளி அவர்கள் செய்திருக்க மாட்டார்கள், ஆனால் காசுக்காக கைதட்டும், ஜால்ரா போடும் கேவலமான ஜென்மங்கங்களுக்கு இவரை பற்றி பேச தகுதி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இன்று தன்னுடைய 46-ஆவது அகவையை கொண்டாடும், தலைசிறந்த மனிதர், நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com