இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி: வீழ்ந்த இடத்திலேயே எழுந்தார்!
- IndiaGlitz, [Thursday,July 13 2017]
திருநங்கை என்றாலே ஒடுக்கப்பட்ட இனமாக இந்த நூற்றாண்டிலும் கருதப்படும் நிலையில் ஒரு திருநங்கை தங்குவதற்கு இடமில்லாமல் பேருந்து நிலையத்தின் தூங்கி காலத்தை கழித்தார். இன்று அவர் அந்த பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நீதிபதி. ஆம், இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோதாக்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜோயிதா, தங்குவதற்கு கூட இடம் கிடைக்காமல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தங்கினார்.
பின்னர் தனது கடுமையான உழைப்பினால் கல்லூரியில் படித்தார். அவருக்கு கால் செண்டர் வேலை கிடைத்தது. ஆனால் அவமானம், அவமதிப்பு காரணமாக வேலையை விட்டுவிட்டார். தன்னை யாரும் உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை என்றாலும் கடும் சொற்களால் தன்னை கிண்டல் செய்ததால் வேலையை விட்டு வந்ததாக கூறுகிறார்
பின்னர் எல்.ஜி.பி.டி என்னும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளை அவர் செய்து வந்தார். குறிப்பாக மூன்றாம் பாலினத்தவர்கள் எவ்வாறு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு ஆகியவை பெறுதல் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவருடைய சமூக சேவையால் இவருக்கு லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதி பதவி கிடைத்தது. தங்குவதற்கு இடம் கிடைக்காமல் எந்த பேருந்து நிலையத்தில் காலத்தை கழித்தாரோ, அதே பேருந்து நிலையம் அருகில் உள்ள நீதிமன்றத்தில் இன்று அவர் நீதிபதி. வீழ்ந்த இடத்திலேயே எழுந்து நின்று சாதனை புரிந்த இந்த திருநங்கை ஜோயிதாவுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்