மழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி?
- IndiaGlitz, [Friday,July 23 2021]
பருவமழை காலங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் டைபாய்டு, டெங்கு, மலேரியா முதற்கொண்டு மஞ்சள் காமாலை வரை பல நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன. இப்படி இருக்கும்போது பருவமழை காலங்களில் குழந்தைகளை எப்படி நோயில் இருந்து பாதுகாப்பது? இந்த நேரத்தில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்?
அதுவும் கொரோனாவிற்கு இடையில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகின்றன. இதற்கு சில அவசியமான பாதுகாப்பு நடிவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது.
முதலில் சுற்றுப்புற சுகாதாரம்- மழை காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்கள் தண்ணீரில் தேங்கி இருக்கும் கொசுக்களினால் வருகிறது. எனவே நம்முடைய வீட்டைச் சுற்றியுள்ள சுகாதாரம் மிகவும் அவசியம். அடுத்து வீட்டிற்குள்ளேயே தண்ணீரை தேக்கி வைத்து இருந்தாலும் இதுபோன்ற ஆபத்து வரும். அதேபோல நாம் குடிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரில் கொசு, ஈக்கள் மொய்க்காதவாறு பார்த்துக் கொள்வது நலம்.
பருவமழை காலங்களில் சுத்தமான குடிநீர், சுத்தமான உணவை உட்கொள்வது முக்கியம். உணவு பொருட்களில் சுகாதாரம் இல்லாமல், கொசு, ஈக்கள் மொய்க்கும்போது நாமே நோய்க்கு வழிவகுத்து கொடுத்துவிடுவோம். எனவே இதுகுறித்து எச்சரிக்கையாக இருப்பது நலம்.
மினரல் வாட்டராக இருந்தாலும் பருவமழை காலங்களில் சிறிய குழந்தைகளுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து கொடுப்பது நல்ல பாதுகாப்பை கொடுக்கும்.
பருவமழை காலங்களில் குழந்தைகளுக்கு சாதாரணமாகவே காயச்சல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் வரும். இது மலேரியா, டைபாய்டு போன்ற பெரிய நோய்களுக்கு அறிகுறியாகக்கூட இருக்கலாம். எனவே சிறிய வயது குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறி வரும்போது உடனே மருத்துவரை அணுகுவது நலம்.
கொரோனாவிற்கு இடையில் குழந்தைகளுக்கு வரும் நோய் அறிகுறிகள் மேலும் பயத்தை உண்டுபண்ணலாம். ஆனால் குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சத்தான காய்கறிகள், இலையுள்ள பச்சை காய்கறிகள், பழங்கள், புரதச்சத்துக் கொண்ட கொட்டை வகைகளை அதிக அளவு கொடுக்கலாம்.
வைட்டமின் சி கொண்ட சிட்ரிக் வகை பழங்கள் மழைகாலங்களில் குழந்தைகளுக்கு மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். எனவே சாத்துக்கொடி, எலும்பிச்சை போன்ற பழங்களை அதிகஅளவு கொடுக்கலாம். அதேபோல ஆப்பிள், வாழைப்பழங்களை தொடர்ந்து கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட முடியும்.
மழைகாலங்களில் வெளியே கடைகளில் சாப்பிடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். மேலும் துரித வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டியது கட்டாயம். காரணம் நாம் உண்ணும் உணவு சுகாதாரமாக இல்லாதபோது அந்த உணவுகளில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்து அது நோய்களை வரவழைத்து விடும்.
மழை நேரத்தில் குழந்தைகளுக்கு அதிகஅளவு சருமப்பிரச்சனை தோன்றுகின்றன. அதுவும் தோல் வறண்டு காணப்படும் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தோல் வறண்டு போகாமல் இருக்க க்ரீம்களையோ அல்லது எண்ணெய் வகைகளையோ தடவுவது நல்லது. மேலும் மழை காலம் என்பதால் குளிர்ச்சி பொருந்திய எண்ணெயை தடவாமல் உடலுக்கு சூடு கொடுக்கும் கடுகு, ஆலிவ் போன்ற எண்ணெயை பயன்படுத்துவது நல்லது.
மழைகாலத்தில் குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மூடுவதுபோன்ற ஆடைகளை உடுத்த வேண்டும். இதனால் குளிர், கொசு போன்ற தொல்லைகளில் இருந்தும் சருமப் பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ள உதவும்.
கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருட காலம் நாம் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கிறோம். நம்முடன் சேர்ந்து குழந்தைகளும் வெளியே செல்லாமல் போன், டிவி என எந்தவித உடல் இயக்கமும் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் எலும்பு, நரம்பு போன்றவற்றின் இயக்கம் குறைந்து வலிமை குன்றி காணப்படும். இதுபோன்ற குறைபாடுகளைத் தவிர்த்து அவர்களை உற்சாகத்துடன் விளையாட அனுமதிப்பதும் பாதுகாப்பான சூழலில் அவர்களுடன் இணைந்து நாமும் விளையாடுவதும் நோய்த் தொற்றில் இருந்து தப்பித்து மனஉறுதி பெற வழிவகுக்கும்.
எனவே குழந்தைகளுடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள், கூடவே உடலுக்கு வலிமை சேர்க்கும் உணவு வகைகளை சுகாதார முறையில் நீங்களே உங்கள் வீட்டில் சமைத்துக் கொடுங்கள். இதனால் வலிமையான ஆரோக்கியத்தை பெறுங்கள்.