விஜய்க்கு கம்பேக் கொடுத்த 'காவலன்'..இணையதள டிரெண்ட்டாக்கிய நேசமணி.. இயக்குனர் சித்திக் காலமானார்..!
- IndiaGlitz, [Wednesday,August 09 2023]
நடிகர் விஜய்க்கு ’அழகிய தமிழ் மகன்’ ’குருவி’ ’வில்லு’ ’வேட்டைக்காரன்’ ’சுறா’ என தொடர்ச்சியாக தோல்வி படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு கம்பேக் கொடுத்த திரைப்படம் ’காவலன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் காலமானார்.
அதேபோல் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டரை ‘பிரெண்ட்ஸ்’ படத்திற்காக உருவாக்கியவர் இவர் தான். இந்த கேரக்டர் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிரெண்ட்ஸ்’ ’காவலன்’ தவிர தமிழில் ’எங்கள் அண்ணா’ ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் சித்திக் இயக்கி உள்ளார். 20 படங்கள் வரை இயக்கிய சித்திக் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் இரண்டு படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சிறுநீரக பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்திக், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த சித்திக் வயது 63.
இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சித்திக், ஆரம்ப காலங்களில் மிமிக்ரியில் திறமையானவராக இருந்தார். இதனை அடுத்து 1989 ஆம் ஆண்டு ’ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் தான் தமிழில் ’அரங்கேற்ற வேலை’ என்று ரீமேக் செய்யப்பட்டது என்பதும் இந்த படத்தை ஃபாசில் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மலையாள திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சித்திக் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.