மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்..!
- IndiaGlitz, [Monday,December 09 2019]
விலை அதிகமாக உள்ளதால் சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு வெங்காயம் பரிசளிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
சப்ரீனா - ஷாகுல் ஆகிய இருவருக்கும் நடந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் சேர்ந்து வெங்காயத்தை திருமணப் பரிசாக அளித்தனர். இது திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வியப்பை தந்தது.வெங்காயம் பரிசளித்தவர்களில் ஒருவரான சித்தன் இது பற்றி சொல்லும்போது திருமண சமையலுக்கு காய்கறி வாங்க கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் சென்றபோது வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை இருந்தது.வேறு வழி இல்லாமல் வாங்கி வந்தோம். ஆனால், பிரியாணிக்கு வழக்கம் போல தேவையான அளவு வெங்காயம் போடாமல் வெள்ளரிக்காய் பயன்படுத்தினோம். எனவே, பழங்களை விட அதிக விலைக்கு விற்கும் வெங்காயத்தை மணமக்களுக்கு திருமணப் பரிசாக அளிக்க நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்தோம். மார்க்கெட் சென்று 5 கிலோ வெங்காயம் வாங்கி வந்து பரிசளித்தோம். மணமக்கள் இந்த எதிர்பாராத பரிசைப் பார்த்து அதிர்ச்சியும் பின்பு மகிழ்ச்சியும் அடைந்தனர் என்று தெரிவித்தார்.
துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சீக்கிரம் வெங்காயத் தட்டுப்பாடு நீங்கும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.