தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு!!!
- IndiaGlitz, [Monday,October 19 2020]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த ஜுலை மாதத்தில் 6 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது தமிழக அரசின் துரித நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்திய அளவில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது நிலைமை மேலும் சீராகி வருவதாகத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,929 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 3,914 ஆக பதிவாகி இருக்கிறது. நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 56 ஆக குறைந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் நேற்று 4 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 6,87,400 எனக் கணக்கிடப் பட்டுள்ளது.
அதேபோல இந்திய அளவிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் கடந்த 12 நாட்களாக 1000 க்கும் கீழ் இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட இந்தியா மிகவும் குறைவான எண்ணிக்கையையே கொண்டிருக்கிறது.