தமிழகப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டம் - கல்வியில் புரட்சியை கொண்டு வந்த ஒரு வரலாற்றுக் கதை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு அரசு, ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரும்போது இது மக்களை மயக்கும் அறிவிப்பு என்று சாதாரணமாக விமர்ச்சித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். இப்படி, நினைத்தாலும் எளிதாகக் கடந்து விட முடியாத ஒரு திட்டம் என்றால் அது தமிழகப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு அளிப்பது தான். ஒவ்வொரு அரசாங்கமும் தன் ஆட்சிக் கட்டிலைத் தக்கவைத்துக் கொள்ளவோ, அல்லது வரலாற்று சாதனைகளில் இடம்பெறவோ திட்டங்களை அறிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இப்படி எந்த அரசியல் நோக்கமும் இன்றி, மூளையைக் கசக்காமல், மனம் வருந்தி உருவாக்கப் பட்ட திட்டங்களில் ஒன்று இந்த இலவச உணவுத்திட்டம் ஆகும்.
இத்திட்டம், திடீரென்று திட்ட அறிக்கையில் சேர்க்கப் பட்டு செயல்படுத்தப் பட்ட ஒன்று அல்ல. தமிழகத்தில் அன்றைக்கு நிலவிய பசி, பட்டிணி கொடுமைகள் மக்களை வாட்டி எடுத்த காலக்கட்டம். பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டுமே இருக்க, மாணவர்களைத் தேட வேண்டிய கட்டாய நிலைமையும் இருந்தது.
பள்ளிகளில் பசியோடு படிக்க வரும் மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்குவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் நிதி நெருக்கடியை சமாளித்து அமைச்சர்களை சரிகட்டி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று என பல்வேறு போராட்ட வரலாறுகளை கடந்து இன்று தமிழகம் முன்மாதிரி திட்ட வரையறைகளைக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
நீதி கட்சியின் பகல் உணவுத் திட்டம்
நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சென்னை மேயராக இருந்த பி.டி. தியாகராஜர் சென்னை மாகாணத்தில் சில பள்ளிகளில் மட்டும் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார். பசியோடு வரும் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு இருந்த சூழலில் பிரிட்டிஷ் அரசு ஒரு மாணவனுக்கு 1 அணாவைத் தாண்டி செலவு செய்யக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தது. 1920 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இந்தப் பகல் உணவுத் திட்டத்தை நீதி கட்சி நடைமுறைப் படுத்தி இருந்தது. பின்பு ஓரப்பாளையும், சேத்துப்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப் பட்டது. ஆனால் பள்ளிகளில் இலவசமாக உணவு கொடுக்கும் திட்டத்தால் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என பிரிட்டிஷ் அரசு 1925 ஏப்ரல் மாதத்தில் இந்தத் திட்டத்தை தடை செய்தது. மதிய உணவு பள்ளிகளில் நிறுத்தப் பட்டவுடன் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு குறைந்தது.
இந்தத் திட்டத்தை நிறுத்தக் கூடாது என நீதிக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. மாணவர்களின் பசியை போக்கும்போது கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நீதிக்கட்சியின் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாத பிரிட்டிஷ் அரசு மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. சென்னைப் பகுதியில் நீதி கட்சி கொண்டு வந்த பகல் உணவுத் திட்டமே, பின்னாட்களில் காமராஜர் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக உருவெடுத்தது.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம்
காமராஜர் காலத்தில் கல்வி துறை இயக்குநராக பணியாற்றிய சுந்தர வடிவேலு ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே பல மாணவர்கள் மயங்கி விழுந்தனர். விசாரித்தபோது குழந்தைகள் பசியால் மயங்கி விழுந்ததை அறிகிறார். அந்த மேடையில் அவர் மனம் உருகி உதிர்த்த வார்த்தைகள் தான் பின்னாளில் உறுதியான மதிய உணவுத் திட்டம் உருவாவதற்கு காரணமாக அமைந்தது. தனது பேச்சில் “பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏதாவது திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும், குழந்தைகளின் பசியினை கூட ஆற்ற முடியாமல் இருக்கிறோம்” என்று சுந்தர வடிவேலு பேசிய உரை அன்றைக்கு எல்லா செய்தித்தாளிலும் வெளிவந்திருந்தது.
சுந்தர வடிவேலுவின் அக்கறை மிகுந்த வார்த்தைகளை தெரிந்து கொண்ட அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவரை நேரில் அழைத்து பேசுகிறார். குழந்தைகளுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டால் பள்ளிகளில் இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து விடலாம் என்று சுந்தர வடிவேலு உறுதி அளிக்கிறார். சுந்தர வடிவேலுவின் கருத்தில் முழுவதும் உடன்பாடு கொண்ட கர்மவீரர் காமராஜர் உடனடியாக இத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்று உற்சாகம் அடைகிறார்.
உடனே நிதியமைச்சர் சுப்பிரமணியத்தை அழைத்துப் பேசுகிறார். நிதி அமைச்சர் நாட்டின் வருவாயில் முழுவதுமாக இத்திட்டத்திற்கு செலவழிக்க வேண்டி வரும். நமது ஆட்சியையே இத்திட்டம் கவிழ்த்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. இத்திட்டத்தை கைவிடுங்கள் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.
நிதி அமைச்சரின் ஒப்புதலை பெற முடியாது போகவே சட்டசபையில் இந்த விவாதத்தைத் தொடங்குகிறார் காமராஜர். அமைச்சர்களும் இத்திட்டத்தை குறித்து எதிர்மறை கருத்துகளையே பதிவு செய்கின்றனர். தமிழகத்தின் தொடக்கப் பள்ளிகளில் மட்டும் 16 லட்சம் மாணவர்கள் பயின்றனர். அவர்களுக்கு மட்டுமே 1 கோடி ரூபாய் செலவாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் செலவுத் தொகை அதிகமாகும் என அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மதிய உணவுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப் பட்டு விட்டால் அரசின் மற்ற திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று அனைவரும் கைவிடவே காமராஜர் சோர்வடைகிறார். ஆனால் மதிய உணவுத் திட்ட கனவு மட்டும் அவரை விட்டு போகவே இல்லை.
தமிழ்நாட்டில் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியாத இயலாமையில் பிள்ளைகளின் படிப்பையே நிறுத்தி விடுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. பசிக் கொடுமையால் ஒரு தலைமுறை படிக்காமல் இருப்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுத்து விடும் என்று உணர்ந்த காமராஜர் எப்படியாவது மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவினை கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.
நாட்டின் தலைவர்கள் அதிகாரிகளாக இருக்கும்போது இத்திட்டத்தை நடைமுறை படுத்த முடியாது. எனவே பொது மக்களின் ஆதரவோடு இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற முடிவிற்கு வருகிறார் காமராஜர். அதனால் பொது மக்களின் நிதி உதவியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். 1955 இல் சென்னையில் ஆசிரியர் மாநாட்டில் உரை ஆற்றிய காமராஜர் மாணவர்களுக்கு உணவு வழங்க பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இத்திட்டத்திற்கு உதவுங்கள் என்று பேசுகிறார்.
இந்த செய்தி செவி வழியாக பல கிராமங்களை சென்று அடைகிறது. காமராஜரின் செய்கையில் உற்சாக மடைந்த மக்கள் பெரும்பாலானோர் அவரை கருணை உள்ளம் கொண்ட தலைவராக உணருகின்றனர். இதில் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்று முடிவெடுத்து பல கிராமங்களில் இருந்து நிதி உதவி அளிப்பதாக செய்திகள் வருகிறது.
நாகலாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து முதலில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றனர். அதோடு தமிழக அரசின் நிதித் துறையில் இருந்து இத்திட்டத்திற்கு எந்த ஒதுக்கீடும் செய்யப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இருந்து உணவுப் பொருட்கள், நிதி உதவி என கிடைக்கப் பெற்று இத்திட்டம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சுமார் 4000 ஆயிரம் பள்ளிகளில் மக்களின் கொடை பொருட்களைக் கொண்டே இலவசமாக மதிய உணவினை அளிக்கிறார் காமராஜர். இந்த அசாத்தியத்தை நடத்தி காட்டிய காரணத்தால் தான் கர்ம வீரர் என்றும் அழைக்கப் படுகிறார். இந்த தருவாயில் காமராஜர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார்.
அதாவது மக்கள் இத்திட்டத்திற்கு பெருமளவு உதவி செய்கின்றனர் என்றாலும் அவர்களின் தலையிலேயே அனைத்துச் சுமைகளையும் வைக்கக்கூடாது. மக்களை மட்டுமே நம்பி இருந்தால் ஒரு வேளை இத்திட்டம் தோல்வி அடையவும் வாய்ப்பு இருக்கிறது என்ற முடிவிற்கு வருகிறார். மதிய உணவுத் திட்டத்திற்கு இனிமேல் 60% நிதி உதவியினை மாநில அரசு கொடுக்கும், 40 % நிதியை மக்கள் கொடுத்தால் போதுமானது என்று அறிவிக்கிறார். இந்த அறிவிப்பினைக் கேட்ட மக்கள் இன்னும் உற்சாக மடைகின்றனர்.
காமராஜரின் புதிய அறிவிப்பு அமைச்சர்களை கதி கலங்க வைக்கிறது. காரணம் 60% நிதி ஒதுக்கீடு என்பது அன்றைய காலத்தில் பெரும் தொகையாக இருக்கிறது. எனவே இத்திட்டத்தை கைவிட்டு விடும் முடிவில் அமைச்சர்கள் இருக்கவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் மதிய உணவுத் திட்டம் இடையில் நின்றுவிடக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருக்கிறார்.
அதற்காக ஒரு வழியினை யோசிக்கிறார் காமராஜர். மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டத்தில் மதிய உணவு திட்டத்தைச் சேர்த்துவிட்டால் எளிதாக நிதி கிடைத்துவிடும் என்று முடிவு எடுக்கிறார். அதற்காக மத்திய அரசின் உதவியை நாடுகிறார். காமராஜரின் மதிய உணவு திட்டத்தை அன்றைக்கு இருந்த இந்திரா காங்கிரஸ் முழுவதுமாக ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும் எதிர்க்கட்சி நிலையில் இருந்து கம்யூனிஸ்ட் காரர்களும் இத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை எடுத்துக் காட்டி மறுத்து விடுகின்றனர்.
தமிழகத்திற்கு வந்த ஐந்தாண்டு கொள்கை ஆய்வாளர்கள் மதிய உணவுத் திட்டத்தைப் பார்த்து பாராட்டு தெரிவிக்கின்றனர். ஆனால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறிவிடுகின்றனர். உடனே காமராஜர், சுந்தர வடிவேலு, நிதி அமைச்சர் சுப்பிரமணியம் மூவரும் இந்திரா காந்தியைச் சந்தித்து உதவி கோருகின்றனர். உங்களது நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆபத்து வராத பட்சத்தில் நடைமுறைப் படுத்துங்கள். தற்போது மத்திய அரசு இதற்கான ஒதுக்கீடுகளை வழங்க முடியாது என கைவிரிக்கிறார் இந்திரா காந்தி.
வெறும் கையுடன் திரும்பிய காமராஜர் தனது திட்டத்தை மட்டும் கைவிடுவதாக இல்லை. அவரை அமைச்சர்கள் சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நிதிச்சுமை இருந்த நிலையிலும் காமராஜர் இந்தத் திட்டத்தை தொடரவே செய்தார். பல்வேறு நெருக்கடிக்களுக்குப் பின்னர் மத்தியத் திட்டக்குழு காமராஜரின் மதிய உணவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. பின்னர் மத்திய அரசின் நிதி பெறப்பட்டு காமராஜரின் மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டது.
எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம்
பக்கத்து வீட்டுப் பெண்மணி கொடுத்த கொஞ்ச அரிசியைக் கொண்டு கஞ்சி காய்ச்சி அன்றைய பசியை மட்டும் போக்கிக் கொண்ட தனது சிறு பிராயத்தைப் பற்றி ஒரு தடவை எம்.ஜி.ஆர் மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்த உடன் பசிக் கொடுமையை போக்கும் விதமாக ஏதேனும் சிறப்பு திட்டம் தீட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது அவர் மனதில் உதித்தது தான் சத்துணவுத் திட்டம்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களுக்கு சத்தான காய்கறிகளைக் கொண்டு சுகாதாரமான முறையில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு இந்தத் திட்டத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டார் எம்.ஜி.ஆர். சுமார் 100 கோடி நிதி ஒதுக்கீட்டில் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் இதற்கான நிதி மாநில அரசிடம் இல்லை என்பது தான் குறிப்பிடத் தக்கது.
அவரது அமைச்சரவையில் இருந்த யாரும் இத்திட்டத்தை வரவேற்கவில்லை. அரசுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று கூறிய பலரின் ஆலோசனைகளை தட்டிக் கழித்து இத்திட்டத்தை 1982 இல் அமல்படுத்தினார். அன்றைக்கு எதிர்க் கட்சி தலைவராக இருந்த கருணாநிதி சத்துணவுத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கொடுத்தார்.
எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட செயல்பாட்டிற்கு ஒரு உயர் மட்டக் குழுவினை அமைத்திருந்தார். அதில் ஊட்டச் சத்து நிபுணர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என பலர் இடம்பெற்றிருந்தனர். சில பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்படவே இத்திட்டம் படு தோல்வியைத் தழுவியது எனச் சட்டசபையில் குரல் எழும்பியது.
மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் சிறு பிராயத்தில் இருக்கும் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் இத்திட்டம் பயன் அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனால் 2-5 வயதுடைய குழந்தைகள் நல வாழ்வு மையங்களிலும், 5 – 14 வயதுடைய பிள்ளைகள் பள்ளிகளிலும் சாப்பிடுவதற்கு ஏதுவான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன.
நிதிச்சுமையை சமாளிக்க மக்களிடம் நிதி திரட்ட வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு வந்தது. தான் கலந்து கொண்ட பல்வேறு மேடைகளில் சத்துணவுத் திட்டத்தைப் பற்றி விளக்கினார். ஆனாலும் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும் என முடிவெடுத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை சத்துணவுத் திட்டத்துக்கு வருவாய் திரட்டும் பணியில் ஈடுபடுத்தினார். ஜெயலலிதா சத்துணவுத் திட்டத்தைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இத்திட்டத்தைக் குறித்து பொது மக்கள் மட்டுமல்லாது சமூகத்தின் மேல் மட்டங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக் கூறி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஒரு முறை மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நுழைந்து உணவை சாப்பிட்டு பரிசோதனையில் ஈடுபட்ட ஜெயலலிதாவை குறித்து எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டினர்.
எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் ஜெயலலிதா எப்படி பள்ளி கூடத்து உணவை பரிசோதனை செய்யலாம் என்று கேள்வி எழுப்பப் பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆர். இத்திட்டத்தின் உயர் மட்ட குழுவின் தலைவராக ஜெயலலிதாவை நியமித்தார். பெரிய பதவியில் அமர்ந்த ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் பின்பு அதிமுகவில் நீங்காத இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
சினிமா துறையினர் முதற்கொண்டு எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கு அதிகப் படியான கொடையினை வழங்கினர். இவ்வாறு பெறப்பட்ட நிதியில் இருந்து இத்திட்டத்திற்கான நிதி சுமை சரி செய்யப்பட்டு வெற்றிகரமான திட்டமாகத் தமிழகத்தில் தொடர்ந்தது. ஏழைகளின் கதாநாயகனாக எம்.ஜி.ஆரை ஆக்கியதில் சத்துணவுத் திட்டத்திற்கு அதிகப் பங்கு இருக்கிறது எனலாம்.
கலைஞர் செய்த விரிவாக்கம்
எம்.ஜி.ஆர் காலத்தில் சத்துணவுத் திட்டத்தை கடும் விமர்சனம் செய்த கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை தடை செய்து விடுவார் என்று பல விமர்சனங்கள எழுப்பப் பட்டன. ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டார் என்பதில் பலருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.
சத்துணவுத் திட்டத்தில் முதல் முறையாக மாதத்தில் இருமுறை முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பருப்பு, காய்கறி மட்டுமே வழங்கப் பட்ட இத்திட்டத்தில் முட்டை என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்பு முட்டையை வாரம் ஒரு முறை என விரிவுப் படுத்தினார் கருணாநிதி.
பின்பு 2008 இல் முட்டை சாப்பிடாத குழந்தைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு வாழைப்பழம் கொடுக்கும் முறையை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு ரூ.1.40 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்று போதிலும் இத்திட்டத்தை கருணாநிதி திறமையாகச் செயல்படுத்திக் காட்டினார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு மாவு, 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மாவு, வாரம் ஒரு முறை முட்டை, மதிய உணவு 100 எடையுள்ள கீரை, காய்கறிகள் போன்றவை கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் விரிவு படுத்தப் பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களது ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்தில் பல விரிவான திட்டங்கள் அறிவிக்கப் பட்டன.
முன்னதாக, சென்னை மாநாகராட்சி பகுதி பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப் பட்டிருந்தது. காலை உணவு பள்ளியிலே வழங்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்தத் திட்டம் தற்போது தமிழகம் முழுக்க அமல்படுத்தப் படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பி.டி. தியாகராஜரால் கொண்டுவரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தமிழகப் பள்ளி கல்வி துறையில் மாணவர்களின் பள்ளி இடை நிற்றலை பெருமளவு குறைத்துள்ளது என்றே சொல்லலாம். பசி, பட்டிணியின் பிடியில் இருந்த தமிழகத்தின் மூன்று தலைமுறை மாணவர்கள் இதனால் பயன் பெற்றுள்ளனர். மக்கள் நலத் திட்டத்தில் முக்கியமான திட்டமாகக் கருதப்படும் சத்துணவுத் திட்டம் 1995 ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்மாதிரியான திட்டமாக எடுத்துக் கொள்ளப் பட்டு, இந்தியா முழுக்க விரிவுபடுத்தப் பட்டது வரலாற்று மைல் என்றே கூறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com