நிதி பற்றாக்குறை நேரத்திலும் மாணவர் நலத் திட்டங்களை நிறுத்தாத தமிழக அரசு!!!

 

கொரோனா பரவல் நேரத்திலும் பல்வேறு கட்டுமான பணி மற்றும் நீர் மேம்பாட்டு திட்டங்களை தமிழக அரசு நடைமுறை படுத்தியது. தற்போது கொரோனா நேரத்தில் ஏற்பட்டு உள்ள நிதி பற்றாக்குறையையும் பொருட்படுத்தாமல் மாணவர்களின் நலத் திட்டங்களை முறையாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணிவகளுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்துள்ளார்.

இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் 9 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி நலத்திட்டப் பணிகளை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 2,38,456 மாணவர்கள் மற்றும் 3,06,710 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

இத்திட்டத்திற்காக 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 5,45,166 விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தொற்றுநோய் காலத்திலும் மற்ற பல செலவீனங்கள் இருந்த பட்சத்திலும் தமிழக அரசு நிதிப் பற்றாக்குறையை பொருட்படுத்தாமல் மாணவர்களுக்கான நலத்திட்டங்களை சரியான நேரத்தில் வழங்க முன்வந்துள்ளது. இதனால் பொது மக்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.