நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடியா? ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்!
- IndiaGlitz, [Friday,October 15 2021]
கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தேனியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று காண்போரை நிர்வாணமாகக் காட்டும் மாயக்கண்ணாடி எனக்கூறி முதியோர் அணியும் கண்ணாடியை ரூ.1 லட்சத்திற்கு விற்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து, திவாகர். இவர்கள் கும்பகோணம் பகுதியில் வசித்துவரும் யுவராஜ் என்பவரிடம் காண்போரை நிர்வாணமாகக் காட்டும் மாயக்கண்ணாடி தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் உற்சாகமடைந்த யுவராஜ் ஆர்வக்கோளாறில் தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு மாயக்கண்ணாடியை வாங்குவதற்காக காரில் தேனி விரைந்துள்ளார்.
இதையடுத்து பெரியகுளம் அருகேயுள்ள நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு வரச்சொன்ன மோசடிக் கும்பல் யுவராஜ்ஜிடம் இருந்து ரூ.1 லட்சத்தை வாங்கிக்கொண்டு முதியோர் அணியும் கண்ணாடியைக் கொடுத்துவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட யுவராஜ் அரசமுத்துவை துரத்திப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் ரூ1 லட்சத்தோடு தப்பிவிட்ட திவாகரை போலீசார் தேடிவருகின்றனர்.