'கர்ணன்' படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்டை அறிவித்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தனுஷ் நடித்த 'கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது என்பது தெரிந்தது. கிராமிய பாடகி மாரியம்மாள் பாடிய கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல், தேனிசை தென்றல் தேவா பாடிய ’பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் மற்றும் ’திரவுபதியின் முத்தம்’ என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான 'கர்ணன்’ படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 'கர்ணன்’ படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’கர்ணனின் யுத்தம்’ என்ற பாடல் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்த நிலையில் இந்த பாடலை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.