தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு 4வது பலி
- IndiaGlitz, [Sunday,April 05 2020]
கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பியவர்களால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ள நிலையில் நேற்று இருவர் பலியானதால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர் கொரோனா வைரசால் மேலும் ஒருவர் பலியாகியுள்ளதால் தமிழகத்தின் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. துபாயில் இருந்து சென்னை வந்த 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கடந்த 2ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் சற்று முன் அவரது ரத்த சோதனை முடிவு வெளிவந்த நிலையில் அவர் கொரோனாவினால் தான் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு 4வது பலி ஏற்பட்டுள்ளதால் தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.