டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு!

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவை எட்டி இருக்கிறது. இதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தற்போது இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின்போது ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 400 ஆவது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். மேலும் வேகமாக 400 ஆவது விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற வரிசையில் 2 ஆவது இடத்தையும் பிடித்து உள்ளார்.

அஸ்வின் தனது 77 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார். முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் தனது 400 ஆவது விக்கெட்டை 72 போட்டிகளில் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். தற்போது தமிழக வீரர் அஸ்வின் 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ஆவது இடம் பிடித்து உள்ளார்.

மேலும் இதுபோன்ற சாதனையை உலகம் முழுவதும் 16 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தி உள்ளனர். அந்த வரிசையில் இதுவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே (619) விக்கெட்டுகளையும் கபில் தேவ் (434) விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் (417) விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். இந்நிலையில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்து உள்ளார்.